இன்று காலை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உள்பட ஒன்பதின்மர்மீது இப்போது செயல்படாதிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் இரு வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிகளின்முன் நிறுத்தப்பட்டு குற்றவியல் சட்டம் பிரிவு 130ஜே-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டம் பிரிவு 130ஜே, பயங்கரவாத கும்பல்களுக்கு ஆதரவு அளிப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளை அங்கீகரிப்பது சம்பந்தப்பட்ட சட்டமாகும். அது, குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் கூடின பட்சம் ஆயுள் தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் மேல் போகாத சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது.
இன்று அந்த ஒன்பது பேரில் நால்வர்- மலாக்கா, காடெக் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஜி. சுவாமிநாதன், வியாபாரியான ஏ.கலைமுகிலன், 28, எஸ். தீரன்,38, டெக்சி ஓட்டுநர் வி.பாலமுருகன்,37, ஆகியோர்- செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோசினா ஆயுப்முன் நிறுத்தப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டது.
இன்னும் ஐவர்- ஆசிரியர் ஆர்.சுந்தரம்,52, மலாக்கா கிரின் டெக்னோலோஜி கார்ப்பரேஷன் தலைமை செயல் அதிகாரி எஸ். சந்துரு, 38, எஸ். அரவிந்தன், 27, எஸ். தனகராஜ், 26, பாதுகாவலர் எம். பூமகன், 29, ஆகியோர் இன்னொரு நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிபதி அஸ்மான் அஹ்மட் முன்னிலையில் நிறுத்தப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.
மேலும் மூவர்மீது இன்று பிற்பகல் பின்னேரம் குற்றம் சாட்டப்படும்.