பினாங்கு தெற்கு நிலமீட்புத் திட்ட(பிஎஸ்ஆர்) த்தை எதிர்த்து ஆயிரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பினாங்கு மீனவர் சங்கத் தலைவர் நஸ்ரி அஹ்மட் தலைமையில் பினாங்கு எஸ்பிலேனேட்டில் பேச்சாளர் சதுக்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிற்பகல் மணி 2வரை அது தொடரும் என்று தெரிகிறது.
மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருப்பதாக நஸ்ரி கூறினார்.
“நாங்கள் அத்திட்டத்தை நிராகரிப்பதன் அடையாளமாக பிற்பகல் மணி 2வரை ஆர்ப்பாட்டத்தைத் தொடர்வோம்”, என்றாரவர்.
பினாங்கில் தெற்கு கடலோரத்துக்கு அப்பால் மூன்று தீவுகளை உருவாக்குவது மீனவர்களின் பிழைப்பைப் பாதிக்கும் என்பதுடன் அப்பகுதியின் இயற்கைச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் என்று மீனவர்கள் கூறுவதாக மலாய் மெயில் செய்தி தெரிவிக்கிறது.
மீனவர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க என்ஜிஓ-களும் பெர்லிஸ், கெடா, பேராக் மீனவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் திரண்டிருந்தனர்