இந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம் பயனளிக்குமா? – இராகவன் கருப்பையா

2003ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இரவு 7  மணிக்கு தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது.

பிரதான கடைத் தெருக்களுக்கு பின்னால் அமைந்துள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிக்குள் திடுதிடுவென நுழைந்த போலீஸ் படையைச் சேர்ந்த 67 உறுப்பினர்கள் அங்கு வாடகைக்குக் குடியிருந்த சுமார் 270 இந்திய பொறியியல் வல்லுனர்களை கைது செய்து மூர்க்கத்தனமாக போலீஸ் நிலையத்திற்கு தரதரவென இழுத்துச் சென்றனர்.

கள்ளக் குடியேற்றக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கை என்ற பெயரில் போலீஸார் மேற்கொண்ட இந்த முரட்டுத்தனமான நடவடிக்கையால் பல பொறியியலாளர்கள் காயமடைந்தனர். அதோடு பலரது கடப்பிதழ்களும் கூட சேதமடைந்ததாக பிறகு புகார் கூறப்பட்டது.

தகவலறிந்து கொதிப்படைந்த மலேசியாவுக்கான அப்போதைய இந்தியத் தூதர் திருமதி வீணா சிக்ரி உடன களமிறங்கி, இந்திய அரசாங்கம் சார்பான தமது கடுமையான ஆட்சேபத்தை பதிவு செய்தார். அதோடு, நமது போலீசாரின் அந்த அராஜகம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் அப்போதைய இந்தியப் பிரதமர்  வாஜ்பாயிடம் அவர் சமர்ப்பித்தார்.

விளைவு: இந்திய அரசாங்கம் மலேசியா மீது மிகுந்த சினமடைந்தது. அங்குள்ள ஊடகங்கள் இந்தத் சம்பவம் தொடர்பாக பரபரப்பான செய்திகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஒட்டு மொத்த இந்திய மக்களும் நம் நாட்டின் மீது கோபமடைந்தனர். அந்தக் காலக்கட்டத்தில் வேலை நிமித்தமாக புதுடில்லி செல்லவிருந்த சுகாதார அமைச்சர் சுவா ஜூய் மெங்கின் வருகையையும் இந்திய அரசாங்கம் திடீரென ரத்து செய்தது. நம் நாட்டுடனான வர்த்தகத்தில் பல தடைகளை அமல்படுத்துமாறு உத்தரவிட்ட பிரதமர் வாஜ்பாய் அங்கு செயல்பட்டுவந்த மலேசிய குத்தகைகள் பலவற்றையும் நிறுத்துமாறு பணித்தார்.

இவற்றையெல்லாம் சற்றும் எதிர்பார்த்திராத மலேசியா ஓரளவு ஆட்டம் கண்டது உண்மைதான். நிலைமையை சமாளிப்பதற்கு அப்போதைய பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலுவை புதுடில்லிக்கு அனுப்பி வைத்தார் அன்றைய இடைக்காலப் பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அஹமட் படாவி. வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல இந்தியா புறப்பட் சாமிவேலு தலை குனிந்துதான் நாடு திரும்பினார். இந்திய அரசாங்கத்தின் கோபம் தனியாத நிலையில், ஒன்றும் சாதிக்க முடியாத பட்சத்தில் சாமிவேலுவின் பயணம் தோல்வியில் முடிந்து பயனற்றுப் போனது.

முறையான குடிநுழைவு பத்திரங்கள் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த அந்த கொடுமையினால் விரக்தியடைந்த பெரும்பாலான பொறியியல் நிபணர்கள், ‘இதோடு போதுமடா சாமி. மலேசியாவின் சங்காத்தமே இனி வேண்டாம்’ என நாடு திரும்பிவிட்டனர்.

சில காலம் கழித்து மலேசிய இந்திய உறவுகள் சீரடைந்த போதிலும் 16 ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த அந்த கசப்பான நிகழ்வுகளை இப்போது மீண்டும் நினைவுக் கூற வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுள்ள பிரதமர் துன் டாக்டர்  மகாதீர், அதுபோன்ற ஒரு இக்கட்டான நிலைமைக்கு மீண்டும் மலேசியாவை இட்டுச் சென்றுள்ளார் இப்போது.

அண்மையில் நடந்த ஐ.நா. பொதுப் பேரவையில் உரையாற்றிய மகாதீர், ஜம்மு காஷ்மீரை இந்தியா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது என்று குற்றஞ்சாட்டி அந்நாட்டை வீனாக ஒரண்டைக்கு இழுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பல்லாண்டு காலமாக இந்திய அரசாங்கம் படும் அவஸ்தையும் வேதனையும் அவர்களுக்குத்தான் தெரியும்.

சரித்திரம் தெரிந்தும் தெரியாதது போல் பேசும் மகாதீர் தங்களுடைய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று இந்திய வெளியுறவுத்துறை எச்சரித்த மறுகணமே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிவிட்டார் நமது பிரதமர்.

‘மனதில் பட்டதை பேசத்தானே வேண்டும்! எனவே ஐ.நா.வில் பேசிய நிலைப்பாட்டில் இருந்து நான் விலகப் போவதில்லை’ என்று மகாதீர் அடாவடித்தனமாகக் குறிப்பிட்டது இந்தியாவின் கோபத்தை இரட்டிப்பாக்கிவிட்டது.

இந்தியாவிலிருந்து ஓடிவந்து இங்கு ஒளிந்துகொண்டிருக்கும் சர்ச்சைக்குறிய சமய போதகர் ஜாக்கிர் நாயக்கை திருப்பி அனுப்ப மறுத்துவரும் நம் பிரதமர் மீது ஏற்கெனவே இந்திய அரசாங்கம் அதிருப்தி கொண்டுள்ளது நமக்கெல்லாம் தெரியும். இந்நிலையில் அவர்களுடைய உள்நாட்டு விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக மகாதீர் பேசியுள்ளதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கத் தொடங்கியது.

மலேசியாவுக்கு எதிராக செம்பனை இறக்குமதியிலும் சுற்றுலாத் துறையிலும் இந்தியா முடுக்கிவிட்டுள்ள மாபெரும் புரக்கணிப்புப் பிரச்சாரத்தினால் நம்முடைய பொருளாதாரம் கனிசமான அளவு பாதிப்படையக் கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா உலகிலேயே அதிக அளவில் செம்பனை எண்ணெய்யை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதன் தேவைகளில் 50%கும் மேல் மலேசிய ஏற்றுமதிதான் பூர்த்தி செய்கிறது இதுநாள் வரையில். உலகின் 2ஆவது மிகப் பெரிய செம்பனை உற்பத்தி நாடான மலேசியாவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியாதான் ஆகப் பெரிய சந்தை.

ஐரோப்பிய சந்தையை ஏற்கெனவே பெருமளவில் இழந்துவிட்ட மலேசியாவுக்கு இந்தியாவின் இந்த புறக்கணிப்பு நடவடிக்கை மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை. மும்பையில் இயங்கும் சக்திவாய்ந்த இந்திய இறக்குமதியாளர்கள் சங்கம், மலேசியாவை புறக்கணிக்குமாறு தனது 875 உறுப்பினர்களையும் பணித்துள்ளது நமக்கு சற்று கவலையளிக்கிறது.

எனினும் மகாதீர் இதுபற்றி வருத்தமடைவதாகத் தெரியவில்லை அல்லது காட்டிக்கொள்ளவில்லை. மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டால் எந்தத் தரப்பும் ஜெயிக்கப் போவதில்லை என அவர் சமாதானம் கூறுகிற போதிலும், பெரும் பாதிப்புக்கு உள்ளாவது மலேசியாதான் என்பதுவே நிதர்சன உண்மை. கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்பாருக்கு மதி கெட்டா மோகும்?

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருவழி வர்த்தகம் உள்ளது. ரசாயனப் பொருட்கள், உலோகம், இறைச்சி மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நாம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம் என மகாதீர் சாக்குப் போக்கு சொல்கிற போதிலும், உலகின் 6ஆவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவுடனான இத்தகைய விஷப் பரீட்ச்சை நமக்கு எதிர்மறையான விளைவுகளையேக் கொண்டுவரும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

இந்தியாவின் இந்த பறக்கணிப்பினால் மலேசியாவுக்கு ஏற்படும் தாக்கம் அடுத்த 2 மாதங்களில் தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. தங்களுடைய செம்பனை உற்பத்திக்கு சந்தையில்லாமல் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெல்டா குடியேற்றக்காரர்களும் சிறுதோட்டக்காரர்களும் இதனால் நிச்சயம் பாதிக்கப்படுவர் என்பது மிகவும் வருத்தமான விசயம்.

இதற்கிடையே அமைச்சரவையில் மகாதீரின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி மட்டுமே இந்த விசயத்தில் பிரதமரை தற்காத்துப் பேசியுள்ளார். அனைத்துலக விவகாரங்களின் மீது மலேசியா சுதந்திரமாகக் கருத்துரைப்பதில் தவரில்லை என்று கூறிய அவர், இந்தியா தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மலேசியாவைத்தான் மீண்டும் நாடும் என்று இறுமாப்பாக பேசியது கோமாளித்தனமாக உள்ளது. இந்தியாவுக்கான இந்தோனேசியாவின் ஏற்றுமதி போதாது என்று குறிப்பிட்ட அவருக்கு அர்ஜெண்டினா, ரஷ்யா மற்றும் யுக்ரேன் முதலிய நாடுகள் இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராக உள்ளன என்பது தெரியாது போலும்.

இந்நிலையில், மூலத்தொழில் அமைச்சர் தெரெசா கொக், அனைத்துலக தொழில்துறை அமைச்சர் டேரல் லெய்க்கிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா ஆகிய மூவரும் இந்த விவகாரத்தில் சற்று பதற்றம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. டேரல் லெய்க்கிங் இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார். அதே போல அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சைஃபுடின் சந்தித்துள்ளார். ஆனால் இவ்விரு சந்திப்புக்களும் எவ்வித பயனையும் கொண்டுவராத நிலையில், 16 ஆண்டுகளுக்கு முன் சாமிவேலுவுக்கு ஏற்பட்ட கதிதான் இப்போது இவர்களுக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. இதன்வழி இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு நன்றாகவே புலப்படுகிறது.

இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்படாத சீனியும் மாட்டிறைச்சியும் அதிக அளவில் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்படம் என தெரெசா கொக் அறிவித்துள்ளது நமக்கு வேடிக்கையாகத்தான் உள்ளது. இந்த அறிவிப்பினால் இந்தியாவின் கோபம் தனிந்துவிடுமா?

இதற்கிடையில் நம் நாட்டின் சுற்றுலாத்துறையும் பாதிப்பின் விளிம்பில் உள்ளதை சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் முஹமடின் ஹஜி கெத்தாப்பி உணர்ந்துள்ளாரா என்றுத் தெரியவில்லை. மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்ற பிரச்சாரம் இப்போது இந்தியா முழுவதும் சூடு பிடித்துள்ளது நமக்குக் கவலையளிக்கூடிய மற்றொரு விசயம்.

கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வருகைபுரிந்த சுமார் 600,000 இந்திய சுற்றுப்பயணிகள் 4.2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அடுத்த ஆண்டு வாக்கில் 728,000ஆக உயர்த்த மலேசியா எண்ணியுள்ள வேளையில், அந்தத் திட்டம் இப்போது தகுடுபுடியாகிவிடும் போல் தெரிகிறது. ஏனென்றால் மலேசியாவைத் தவிர்த்துவிட்டு மோரிஷஸ், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா முதலிய நாடுகளுக்குச் செல்லுமாறு இந்திய சுற்றுலாத்துறை தனது குடிமக்களுக்கு ஆலோசனைக் கூறியுள்ளது.

இந்நிலையில், குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் தமிழ் நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி. 500,000கும் மேற்பட்டத் தமிழர்கள் மலேசியாவில் வேலை செய்கின்றனர். இந்த புறக்கணிப்பு நடவடிக்கையால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைவதோடு இந்தியாவுக்கும் வருமானம் குறையும் என்றுக் கூறி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளார். இந்த புள்ளி விவரம் அவருக்கு எங்கு கிடைத்தது என்றுத் தெரியவில்லை. எல்லா விசயங்களிலும் அரசியல் இலாபம் தேட முனைவது தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலையாயிற்றே!

எது எப்படியாயினும் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சிக்கல் பூதாகரமான ஒரு நிலையை அடைவதற்கு முன் மலேசியத் தலைவர்கள் வீன் விதண்டாவாதப் பேச்சைக் கைவிட்டு, ஆக்ககரமான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வது அவசியமாகும். அதன் முதல் கட்டமாக ஸாக்கிர் நாயக்கை நாடு கடத்தினால் இந்தியாவின் கோபம் சற்றுத் தனிய வாய்ப்புள்ளது என்பது மக்களின் பொதுவானக் கருத்து.