‘பிக் போஸ்’ முகேனும் நமது இதர சாதனையாளர்களும் – இராகவன் கருப்பையா

கடந்த மாதத்தில் நிறைவடைந்த ‘பிக் போஸ் 3’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மலேசிய, இந்திய கலையுலகில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் நம் நாட்டு இளைஞர் முகேன் ராவ்.

81 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் சவால் மிகுந்த 105 நாள்களை வெற்றிகரமாகக் கடந்து வாகை சூடிய முதல் மலேசியரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி, கடந்த வாரத்தில் தமிழ் நாட்டின் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘சூப்பர் சிங்ஙர்’  இறுதிப் போட்டிகளின் இடைவெளியில் தமது பாடலை பாடுவதற்கு கிடைத்த வாய்ப்பும் அவருக்கு சிறந்ததொரு அங்கீகாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாராட்டத்தக்க இந்த சாதனைக்கெல்லாம் முத்தாய்ப்பாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பத்துமலை வரையில் அவருக்கு மாபெரும் வரவேற்பும் மாலை மறியாதைகளும் குவிந்தன. அமெரிக்காவில் ‘ஒஸ்கார்’ விருதை வென்றவரைப் போல அவர்  நடத்தப்பட்டார்.

இதுபோன்ற உட்சாகமூட்டும் நிகழ்வுகளை ஒரு வெற்றியாளருக்கு நடத்துவது அவசியம்தான் – தவறில்லை. ஆனால் நம் சமுதாயத்தின் பாரட்டும் வழிமுறைகள் எதனை நோக்கிப் பயணிக்கின்றது என்பதுதான் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்விக் குறி.

நம் இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளையோர் பலத் துறைகளில் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்துவருகின்றனர். ஆனால் நம் நாட்டைப் பொருத்த வரையில் அவர்கள் அனைவருமே இலைமறை காயாகவே இருந்து வருகின்றனர்.

மற்ற இனத்தவரோ, அவர்கள்  சார்ந்த இயக்கங்களோ, ஊடகங்களோ இவர்களுக்கு உரிய விளம்பரம் அளித்து பாராட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கத்திடம் இருந்துக் கூட நாம் பெரிதாக எதையும் எதிர்பார்த்துவிட முடியாது.

பனிச்சறுக்கு வீராங்கனைகள்

ஏழே வயது நிரம்பிய ஸ்ரீ அபிராமி சந்திரன் அனைத்துலக பனிச் சறுக்குப் போட்டிகளில் உலகை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார் என்ற விசயம் நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? சர்வதேச அரங்கில் அவர் பல வெற்றிகளை தொடர்ந்து குவித்துக்கொண்டிருக்கிறார்.

அதே போல 14 வயது மாணவி சரண்யா கிஷோர்குமாரும் இத்துறையில் பல சாதனைகளை புரிந்து வருகிறார். அன்மையில் இந்தோனேசியாவில் அனைத்துலக பனிச்சறுக்குப் போட்டிகளில் கூட 4 தங்கம் 1 வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டுக்கும் நம் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்தார்.

பனிப் பொழிவே இல்லாத ஒரு நாட்டை இந்த விளையாட்டில் பிரதிநிதிப்பதற்கு இந்த வீராங்கணைகள் எவ்வளவு கடுமையான பயிற்சிகளையும் தியாகங்களையும் செய்திருக்க வேண்டும்!

இவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரமும் விளம்பரமும் இல்லை?

கிஷோணா செல்வதுரை

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த கிஷோணா செல்வதுரை பூப்பந்து விளையாட்டில் மிளிர்கிறார். இவ்விளையாட்டை தொழிலாகக் கொண்டுள்ள இந்த 21 வயதுத் தாரகை அனத்துலக அரங்கில் பல போட்டிகளில் பங்கேற்று மலேசியாவின் புகழை  நிலைநாட்டியுள்ளார்.

ஸ்குவாஷ் எனும் சுவர்பந்து

சுவர்பந்து வீராங்கனை சிவசங்கரி சுப்ரமணியத்தையும் நாம் மறந்துவிட முடியாது. 20 வயது நிரம்பிய இவர் தேசிய விருதை வென்ற மிகக் குறைவான வயதுடையப் பெண் என்ற பெருமைக்குறியவர்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் இளையோர் போட்டிகளின் வெற்றியாளரான சிவசங்கரி பல அனைத்துலகப் போட்டிகளில் நாட்டை பிரதிநிதித்துள்ளார்.

நம்மில் எத்தனைப்பேர் விமான நிலையம் வரை சென்று இவர்களை வரவேற்று தம்படம் எடுத்து மகிழ்ந்தனர்?

அம்பு எய்தும் ஹீரோ

மற்றொரு சாதனை வீரர்  சுரேஷ் செல்வதம்பி. ஒரு கால்தான் ஊனமேத் தவிர வேரு எந்த விதத்திலும் தாம் சலைத்திடவில்லை என்பதனை நிரூபித்துள்ளார் இந்த 25 வயது இளைஞர்.

கடந்த ஜூன் மாதத்தில் ஹோலந்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச அம்பு எய்தும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றார் இவர்.

சாலை விபத்தொன்றில் ஒரு காலை இழந்த சுரேஷ்  பிரிதொரு விபத்தில் தமது சகோதரியையும் இழந்தார். எல்லா வலிகளையும் சுமந்துகொண்டு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதன் பேரில்தான் சாதனையின் உச்சத்தை அவரால் தொட முடிந்தது.

விஞ்ஞானிகளின் உதயம்

இவைகளைத் தவிர்த்து கல்வித் துறையிலும் கூட தற்போது ஏராளமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகலாவிய நிலையில் சாதனைகளைப் படைத்து வருகின்றனர் என்பது வெள்ளிடை மலை.

நாட்டிலுள்ள 525 தமிழ்ப் பள்ளிகளையும் சேர்ந்த நமது செல்வங்கள் கடந்த சில ஆண்டுகளாக போட்டாப் போட்டி போட்டுக்கொண்டு அறிவியல், பாரம்பரிய நடனம், புத்தாக்கப் படைப்பு போன்றத் துறைகளில் அனைத்துலக ரீதியில் பல்வேறு சாதனைகளை வெளுத்துக்கட்டுவது நமக்கெல்லாம் மிகவும் பெருமையாக உள்ளது.

ஆனால் முகேன் ராவுக்கு கிடைத்ததைப் போன்ற ஆர்ப்பாட்மான வரவேற்போ விளம்பரமோ இந்த இளம் சாதனையாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் கவலையான விசயம்.

மிக அண்மையில் கூட ஜாக்கர்த்தாவில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் மற்றும் ரோபோட்டிக் போட்டிகளில் சுங்கைபட்டானி சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் அமோக சாதனைகளைப் படைத்து வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பினர்.

தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கூட இளம் விஞ்ஞானிகள் தைவானில்  நடத்தப்பட்ட 10ஆவது அனைத்துலக புத்தாக்கப் படைப்புப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர். கடந்த 5 மாதங்களில் இவர்கள் பெற்றுள்ள 4ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரிதொரு சர்வதேச இளம் ஆய்வாளர் புத்தாக்கப் போட்டியில் தைப்பிங் செயிண்ட் திரேசா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைப் படைத்தனர்.

இப்பள்ளியைச் சேர்ந்த மித்ரா கணேசன், தமிழ்செல்வன் கனகநாதன் மற்றும் தானியலட்சுமி ஆகிய மூவரின் படைப்பான வெள்ள முன்னறிவிப்பு மற்றும் திறன் வடிகால் செயல்முறை தொடர்பான கண்டுபிடிப்பு அப்போட்டியில் சிறந்த அடைவுநிலையைப் பெற்றது.

இம்மாதத் தொடக்கத்தில் இத்தாலியில் நடைபெற்ற அனைத்துலகப் பாரம்பரிய நடன விழாவில் பங்கேற்ற கிளேங் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 9 மாணவிகள் முதல் நிலையில் வாகை சூடினார்கள்.

இவை அனைத்துமே நம் இளம் செல்வங்கள் படைத்துவரும் சாதனைகளுக்கு ஒரு நல்ல எடுத்துகட்டாகும்.

ஆக இத்தகைய சாதனையாளர்ளை ஊக்கப்படுத்திக் கொண்டாடுவது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளிக்கூடம், சமுதாயம் மட்டுமின்றி நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாக பொருள்படும்.

முகேன் ராவுக்கு வழங்கப்பட்ட ஆரவாரமான 5 நட்சத்திர  கவனிப்பைப் போன்று மற்ற சாதனையாளர்களுக்கும் நம் சமுதாயம் சரிசமமாக வழங்காவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் ஊக்குவிப்பையும் விளம்பரத்தையும் வழங்குவது நமது கடமையாகும்.  நம்மிடையே அப்துல் கலாம்களையும், விஞ்ஞானிகளையும், அறிவியல் வல்லுனர்களும் உருவாக உச்சாகமூட்டும்.