தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியில் பெருமளவிலான மாற்றங்கள் நிகழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
இந்தத் தோல்விக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருக்குதல் கொடுத்தனர். அந்தத் தேர்தல் முடிவுகள் மகாதீருக்கு எதிரான வாக்கெடுப்பாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
மாறாக, கூடிய விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என பக்காத்தான் கூட்டணியின் நிர்வாக மன்றக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தார்.
அன்வார் இப்ராஹிமிடம் பதவி ஒப்படைப்புத் தேதியையாவது அறிவிப்பார் என்று எண்ணியவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான்.
‘பூனைக்கு யார் மணி கட்டுவது’ என்ற நிலையில் கூட்டணிக் கட்சிகளின் இதரத் தலைவர்கள் இப்போது தலை சுற்றிப்போய் உள்ளதாகத் தெரிகிறது.
ஆளும் கட்சிக்குள் எதிர்கட்சி
வேறு வழியில்லாமல் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களே தற்போது எதிர்கட்சி உறுப்பினர்களைப் போல பேசவும் நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிட்டனர்.
ஜ.செ.க.வைச் சேர்ந்த கெப்போங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கடந்த வாரத்தில் அரசாங்கம் மீதான தமது ஆதங்கத்தை மக்களவையில் கொட்டித் தீர்த்தார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் அந்தக் கொடூர சட்டத்தை நீக்கக் கோரி மகஜர் சமர்ப்பிக்க நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற போது லிம் கிட் சியாங், சார்ல்ஸ் சந்தியாகோ, ராம் கர்ப்பால் சிங், ரோனி லியு போன்றத் தலைவர்களும் உடன் சென்றனர்.
பொதுத் தேர்தலுக்கு முன் சொஸ்மா சட்டத்தை கிண்டலடித்துப் பேசிய மகாதீர், அதே சட்டத்தின் கீழ், சொந்தக் கூட்டணியின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 12 பேர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதை இப்போது தற்காத்துப் பேசுகிறார்.
எல்லாருமே ஆளும்கட்சி
மகஜர் எடுத்துச் சென்றவர்கள் ஆளுங்கட்சி குடும்ப உறுப்பினர்கள். உடன் சென்றத் தலைவர்கள் ஆளுங்கட்சியினர். மகஜர் பெற்றுக்கொண்டது ஆளுங்கட்சித் தலைவர்கள். அந்த சட்டத்தை அமலில் வைத்திருப்போரும் ஆளும் கட்சியினர்தான்!
சொஸ்மாவுக்குப் பின்னால் யார்?
இவர்கள்தானே அரசாங்கம்! இவர்களிடம்தானே அதிகாரம் உள்ளது! ஏன் இவர்களால் சொஸ்மா பிரச்னைக்குத் தீர்வுகாண முடியவில்லை?வெரும் பொம்மைகளாகத்தான் இவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்களா? அப்படியென்றால் இவற்றையெல்லாம் ஆட்டிப்படைப்பது யார்? எதற்காக இந்த சொஸ்மா அரங்கேற்றம்? இதன் பிண்ணனியில் உள்ள இயக்குனர்கள் யார்? போலீஸ் படை தன்னிச்சையாகத்தான் செயல்படுகிறதா?
இந்நிலையில் வெந்த புண்ணில் லேலைப் பாய்ச்சுவதைப் போல் ஒரு அறிக்கை வெளியிட்டார் புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் அயொப் கான் மைடின் பிச்சை.
ஜாமினில் அவர்களை விடுவித்தால் வெளியே சென்று அவர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தக் கூடும் என்று கூறியது முற்றிலும் கேளிக் கூத்தாகவே உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் எங்கே போய் தாக்குதல் நடத்துவார்கள்? யாரைத் தாக்குவார்கள்? அவர்களிடம் அவ்வளவு சக்தி இருக்கிறதா? எங்கே தமிழீழம் அமைப்பார்கள்?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடும் போது நமக்கு கிடைப்பது ஓர் அதிர்ச்சியான பதிலாகும்.
அரசாங்கம் என்பது என்ன?
அரசாங்கம் என்பது சமூகத்தை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் ஒரு வழிமுறை, சட்டத்தின் கீழ் இயங்கும் உரிமையைக் கொண்டது, அவற்றைச் செயல்படுத்துவதற்கான உரிமை, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ளதாகும்.
இந்த உரிமையை அரசாங்கத்தில் இருக்கும் வலிமை கொண்டவர்கள் தங்களின் கட்டுபாட்டுக்குள் எடுத்துக்கொள்ளும் போது அதை நாம் ஊடுருவப்பட்ட அரசு என்கிறோம், இதை ஆங்கிலத்தில் டீப் ஸ்டேட் என்பார்கள்.
நாம் அந்த நிலையில் இருக்கிறோமா என்ற வினாவும் அச்சமும் உண்டாகிறது.
ரிஃபோர்மாசி ஆதரவு
இதற்கிடையே 21 ஆண்டுகளுக்கு முன் அரசாங்கத்திலிருந்து அன்வார் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது அமைக்கப்பட்ட ‘ரிஃபோர்மாசி’ எனப்படும் சீர்திருத்த இயக்கம் அண்மையில் மாபெரும் கருத்தரங்கம் ஒன்றை தலைநகரில் நடத்தியது.
ஆட்சியைக் கைப்பற்றி 2ஆம் ஆண்டு நிறைவு நாளான அடுத்த வருடம் மே 9ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்படி மகாதீர் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் துனைத் தலைவர் சைட் ஹுசேன், குறிப்பிட்ட அந்தத் தேதிக்குள் மகாதீர் விவேகமாகவும் கௌரவமாகவும் பதவி விலகவேண்டும் என திட்டவட்டமாக அறிவித்தார்.
அன்வார் அடுத்த பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை வலுத்து வருவது ஒரு நல்ல அறிகுறி என நம்புவோம்.