தாய்லாந்தில் உயிரிழந்த காட்டு மான் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக்

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உயிரிழந்த காட்டு மான் ஒன்றின் வயிற்றிலிருந்து 7 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குன் சதான் தேசிய பூங்காவில் இருந்த அந்த ஆண் மானின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் பைகள், காபி கவர்கள், ஆண்கள் உள்ளாடை மற்றும் பிளாஸ்டிக் கயிறுகள் ஆகியவை கண்டறிப்பட்டுள்ளன.

“அந்த மான் உயிரிழப்பதற்கு முன்பாக நீண்டகாலமாக பிளாஸ்டிக்கை உண்டு வருவதாக தெரிகிறது” என குன் சதான் தேசிய பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில், தாய்லாந்தில் இளம் கடல் பசு ஒன்று பிளாஸ்டிக்கை உண்டதால் உயிரிழந்தது.

மரியம் என்று அழைக்கப்பட்ட அந்த கடல்பசு மீட்கப்படும் புகைப்படம் வைரலானபோது சமூக வலைதலங்களில் பலரின் ஈர்ப்பை பெற்றது.

ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு பிறகு அந்த கடல் பசு உயிரிழந்தது. அதன் உடற்கூறு ஆய்வில் அதன் வயிற்றில் பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வேண்டும் பொறுப்பு

நவம்பர் 25ஆம் தேதியன்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் குன் சதான் தேசிய பூங்காவில் 10 வயது ஆண் மான் இறந்து கிடப்பதைக் கண்டறிந்தார்.

மேலும் அதன் வயிற்றில் ரப்பர் கையுறைகள், நூடுல்ஸ், மற்றும் சிறிய டவல் ஒன்றும் கண்டறியப்பட்டது.

“இந்த மான் நீண்ட நாட்களாக பிளாஸ்டிக்கை தின்று வந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என அந்த தேசிய பூங்கா இயக்குநர் தெரிவித்தார்.

“அந்த பிளாஸ்டிக் பொருள்கள் மானின் உணவுக் குழாயை அடைத்திருக்கும் என அதிகாரிகள் நினைக்கின்றனர். ஆனால் மேலும் விசாரணை நடத்தப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தலங்களில் பலர் , அந்த பூங்காவுக்கு செல்லும் பார்வையாளர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தாய்லாந்து அதிகப்படியான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகிறது.

தாய்லாந்தில் ஒவ்வொரு வருடமும் 75 பில்லியன் பிளாஸ்டிக் குப்பைத் துண்டுகள் வீசப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர், சில்லறை விற்பனையாளர்கள் 2020ஆம் ஆண்டிற்குள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.