புத்தாண்டிலிருந்து மலிவு விற்பனைகளை ஆண்டுக்கு நான்கு தடவை என்றில்லாமல் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் நடத்தலாம் என வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.
2019, வர்த்தகச் சட்ட (மலிவு விலை)த்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 2-இலிருந்து அமலுக்கு வருகின்றன. அதன்படி வணிகர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மலிவு விற்பனைகளை நடத்தலாம். அதற்காக அனுமதி கேட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமுமில்லை.
“முன்பு அவர்கள் மலிவு விற்பனையை நடத்துவதற்கு 14 நாள்கள் இருக்கும்போது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சட்டத் திருத்தம் வந்த பிறகு அப்படிச் செய்ய வேண்டியதில்லை”, என்று அமைச்சர் கூறினார்.
விற்பனைகளைக் கட்டுப்படுத்துவது வர்த்தகப் பெருக்கத்துக்குத் தடை போடுவதுபோல் அமைகிறது என்றாரவர்.