கடந்த ஜனவரி மாதம் முதல் நாம் எதிர்பாராத அளவில் நம்மை சுற்றி நிறையவே சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் இம்மாத நிகழ்வுகளின் பரபரப்பு வேறு எந்த மாதத்திலும் இல்லை!
முன்னாள் ம.இ.க. தலைவர் துன் சாமிலுவிற்கு இன்னொரு மணைவி இருப்பதாக வந்த செய்தி முதல் மொங்கோலிய அழகி அல்த்தான்துயாவை முன்னைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்தான் கொலை செய்ய உத்தரவிட்டார் என்ற செய்தி வரை நாட்டு மக்களின் கவனத்தை இந்த டிசம்பர் மாதம் முற்றிலும் வசப்படுத்திக்கொண்டது.
கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து சாமிவேலுவுக்கு தாம் துணைவியாக இருப்பதாகவும் அவருடனான தமது எல்லாத் தொடர்புகளையும் அவருடைய மகன் வேல்பாரி திடீரென துண்டித்துவிட்டதாகவும் மரியம் ரோஸலின் எனும் 59 வயது மாது இம்மாதத் தொடக்கத்தில் வழக்குப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தத்தகவல் தொடர்பான ஆரவாரம் முடிவதற்குள் நஜிப் பற்றிய விஷயம் நாட்டை உறையச் செய்தது. 13 ஆண்டுகளுக்கு முன் நஜிபின் உத்தரவின் பேரிலேயே அல்த்தான்துயாவை ஷா ஆலமில் கொலை செய்தேன் என மரணதண்டனை கைதி அஸிலா ஹட்ரி திடீரென சத்தியப் பிரமாணம் செய்தார்.
இம்மாதத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய மற்றொரு நிகழ்வு மலாக்காவில் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் ஆண்டுக் கூட்டம்.
மக்களின் கவனத்தை ஈர்த்த பிரிதொரு விஷயம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இந்தியாவை மீண்டும் சரண்டைக்கு இழுத்ததுதான்.
அந்நாட்டின் புதிய குடியுறிமை சட்டத்தைத் தாக்கிப் பேசிய அவர், இங்குள்ள சீனர்களையும் இந்தியர்களையும் கூட தாழ்த்திப் பேசி சினத்தை உண்டாக்கினார்.
‘நாக்கில் சனி’, அவருக்கு ‘மூளைக் கோளாறு’ என்றெல்லாம் இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் வசைப்பாடும் அளவுக்கு நடந்துகொண்டார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் நெற்றியில் அணிந்திருந்த திருநீறை, மறைந்த கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தி என்று பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் தனது ஈனபுத்தியால் கிண்டலடித்து உளரிய சம்பவமும் இம்மாதத்தில்தான்.
முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஸாஹிட்டும் அவருடைய மணைவியும் 18 சொகுசு வாகனங்கள் உள்பட மொத்தம் 20 வாகனங்கள் வைத்திருந்த தகவல் இம்மாதம் நாட்டை உளுக்கிய இன்னொரு செய்தியாகும்.
எண்ணற்ற பண மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அவர் அந்த வாகனங்களுக்கு சாலை வரியாக மொத்தம் 35,000 ரிங்கிட்டும் காப்புறுதிக்காக 72,000 ரிங்கிட்டும் செலுத்தியுள்ளது நமக்கு அதிர்ச்சிதான்.
இதே போன்ற ஒரு வழக்கில் சிக்கியுள்ள நஜிப் கடந்த 2014ஆம் ஆண்டில் தமது மணைவி ரோஸ்மாவுக்கு 543,000 ரிங்கிட் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பிறந்தநாள் பரிசாக வழங்கிய விவரமும் 2 வாரங்களுக்கு முன் அம்பலமானது.
இதற்கிடையே பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டில் தம்மிடம் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டார் என அவருடைய முன்னாள் ஊழியரான 26 வயது முஹமட் யூஃசோப் ராவுத்தர் சத்தியப் பிரமாணம் செய்து பெரும் சர்ச்சையை உண்டுபண்ணினார்.
ஆகக்கடைசியாக நடந்த பரபரப்பு சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த, சீன கல்வி அமைப்பான டொங் ஜியௌ ஸொங்கின் ‘ஜாவி திணிப்பு எதிர்ப்பு மாநாடு’ ரத்து செய்யப்பட்டதாகும்.
பல மலாய்க்கார அரசு சாரா இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆவலுடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிகப் பெரிய அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.
ஆக நாட்டு மக்களின் கவனத்தை பெருமளவில் திசை திருப்பிய இத்தகைய சம்பவங்களை நிறையவே தாங்கி இவ்வாண்டை ஒரு நிறைவுக்குக் கொண்டுவருகிறது இந்த டிசம்பர் மாதம்.