விடுதலை புலிகளுடன் தொடர்புள்ளதாக கைதான 12 நபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோலாலம்பர் மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று நள்ளிரவில் கூடிய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
2020 புத்தாண்டை வரவேற்க நேற்று மாலை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பாதகைகளுடன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆட்சேபனையுடன் கோரிக்கையையும் வைத்தனர் கைதானவர்களின் குடும்பத்தினர்கள். இவர்களுடன் மனித் உரிமைகள் சார்ந்த பல தரப்பு மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான தமிழ்மலர், ”இன்று கூடியுள்ள நாங்கள், இந்த கைதாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவர்கள் எந்த வகையான குற்றங்களையும் செய்யாதவர்கள்”என்றார். இவர் கைதானவர்களில் ஒருவரான கலமுகிலனின் மனைவியாவார்.
மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த புதிய ஆண்டில் நீதியும் நியாயமும் உடனடியாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என கலந்து கொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
2009ஆம் ஆண்டுடன் விடுதலை புலிகளின் இயக்கம் முற்றாக செயலிழந்தது. இலங்கையில் இருக்கும் முன்னால் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் கூட தற்போது ஏனைய குடிமக்களுடன் இனைந்து வாழ்கின்றனர். விடுதலை புலிகள் முற்றாகவே செயல்பாட்டில் இல்லை.
இந்த நிலையில் மலேசியாவில் 12 நபர்களை தடுப்புக் காவல் சட்டத்தில் அடைத்து வைத்திருப்பது மிக மோசமான உரிமை அத்துமீரலாகும் என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் இயக்குனர் வழக்கறிஞர் கா, ஆறுமுகம். “இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது இவர்கள் குற்றம் புரிந்துள்ளதிற்கான ஆதாரம் இருக்குமானால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.