போரை துவக்க அல்ல; நிறுத்தவே தாக்குதல்: டிரம்ப் விளக்கம்

குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:ஈராக்கில், அமெரிக்கர்களுக்கு எதிராக, சமீபத்தில் நடந்த அனைத்து வன்முறை சம்பவங்களும், சுலைமானியின் மேற்பார்வையின் கீழ் நடந்தவை. இந்தியாவின் புதுடில்லியில் இருந்து, பிரிட்டனின் லண்டன் வரை நடந்த, அனைத்து பயங்கர வாத தாக்குதல்களிலும், சுலைமானியின் பங்கு நிச்சயம் உள்ளது. அவர் படுகொலை செய்யப்பட்டதன் மூலம், பயங்கரவாதத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை சீர்குலைக்கும் வேலைகளை, 20 ஆண்டுகளாக அவர் செய்து வந்தார். நாங்கள் நேற்று முன் தினம் நடத்திய தாக்குதலை, பல ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், பல உயிர்களையாவது காத்திருக்க முடியும்.சுலைமானியின் மரணம், நிச்சய மாக போருக்கு வழி வகுக்காது.

நாங்கள் ஒரு போரை நிறுத்தும் நோக்கில் தான், இந்த தாக்குதலை நிகழ்த்தினோம். போரை துவங்குவது, எங்கள் நோக்கம் அல்ல.பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, அண்டை நாடுகளை நிலை குலைய செய்யும் நடவடிக்கைகளை, ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஈரான் மக்கள், பயங்கரவாதத்தை விரும்பவில்லை. அவர்கள் அமைதியையும், நல்லுறைவையுமே விரும்புகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.