அமெரிக்கா தாக்கினால் திருப்பித் தாக்குவோம்!

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் இராணுவ நிலைகளைத் தாக்கினால், திருப்பித் தாக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

அண்மையில் நேட்டோ படையினர் பாகிஸ்தான் இராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.