மகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு 2020 – இராகவன் கருப்பையா


என்றும் இல்லாத அளவுக்கு இந்நாட்டில் நம் இனம், மொழி, சமயம் ஆகியவற்றை தற்காக்க வேண்டிய சூழலில் 2020ஆம் ஆண்டு பெரும் சவால் மிக்க ஒரு ஆண்டாக அமையும். குறிப்பாக

தாய்மொழி கல்வி, சமயம், இனவாதம் வழி, இனவேற்றுமையை தூண்டும் செயல்கள் பல கோணங்களில் இருந்தும்  வந்த வண்ணமாக இருப்பதை நாம் மறுக்க இயவாது.

பாரிசான் ஆட்சியின் போது  தமிழ் மொழி வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு வசதிகள் இல்லையென்ற போதிலும் அது நிலைத்திருப்பதற்கு ஆபத்தில்லை என்ற சூழ்நிலை இருந்தது.

ஆனால் பக்காத்தான் ஆட்சியில், எல்லா பள்ளிகளிலும் 4ஆம் வகுப்பில் இருந்து ஜாவி பாடத்திணிப்பு, அதிகாரப்பூர்வ இஸ்லாம் மதப்பிரச்சாரம் மற்றும் தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என  பகிரங்கமாகவே மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகள், முதலியவற்றை வைத்துப் பார்த்தால் பாரிசான் அரசாங்கத்தின் ஆதிக்கம் அடித்தளத்தில் திட்ட மிட்ட வகையில் இயங்குவதை காணமுடிகிறது.

அதன் வஞ்சக எண்ணம் அரசு ஊழியர்களின் வழி அறங்கேற்றப் படுவது ஆழத்தில் இயங்கும் மலாய் இன ஆதிக்கத்தையும் அதன் வேரூண்டிய இனவாத பிடியையும் உணர முடிகிறது.

தேசியப் பள்ளிகள் இஸ்லாமிய சமயப் பள்ளிகளைப் போல் மாறிவிட்டன, அதனால்தான் தமிழ், சீனப் பிள்ளைகளின் ஆதரவு குறைந்து வருகிறது என தமது முன்னைய 22 ஆண்டுகால ஆட்சியின் போது துன் டாக்டர் மகாதீர் சாடியிருந்தார்.

இவ்வாண்டின் 4ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாவி பாடம் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த ஆண்டு மத்தியில் அறிவிக்கப்பட்ட போது மல்வேறு கோணங்களில் இருந்தும் அதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியௌ ஸொங் இது குறித்து ஒரு கலந்துறையால் நிகழ்ச்சியை கடந்த மாதம் 28ஆம் தேதி காஜாங்கில் நடத்துவதாக இருந்தது.

சீனர்கள் இப்படி நடந்துகொண்டால் மலாய்க்காரர்களும் எதிர்ப்புக்கு எதையாவது செய்வார்கள், சீனப் பள்ளிகளை இழுத்து மூடச் சொல்வார்கள் என்றார் மகாதீர். மலாய்க்கார இயக்கங்களும் வீருகொண்டு எழுந்து அந்த நிகழ்ச்சியை உக்கிரமாக எதிர்த்தன. விளைவு: பாதுகாப்பைக் காரணம் காட்டி போலீஸ் அந்நிகழ்ச்சியை ரத்து செய்தது.

ஆக, நாடு முழுவதும் இவ்வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜாவி பாடத்திட்டத்தை அமலாக்கம் செய்யும் அரசாங்கத்தின் திட்டம் என்ன என்பது தெளிவாக இல்லை.

இந்நிலையில், தமிழ், சீனப் பள்ளிகள் இந்நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானது என இன்னொரு கும்பல் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குத் தொடுத்த வண்ணமாக உள்ளது நமக்கு மற்றொரு சவாலாகும்.

தமிழ் சீனப் பள்ளிகளை இழுத்து மூடி இன்பம் காணத் துடிக்கும் இந்த வெறியர்களுக்கு எதிராக ஒற்றுமையை வலுப்படுத்தி மொழியை தற்காக்கப் பாடுபடுவது நம் அனைவருடைய கடமையுமாகும்.

இதற்கிடையே இவ்வாண்டிலிருந்து பள்ளிகளிலும் உயர் கல்வி நிலையங்களிலும் மதப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு யயாசான் டக்வா இஸ்லாமியா(யாடிம்) எனும் இஸ்லாமிய இயக்கத்திற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியது.

பாடங்கள் போதிக்கப்படவேண்டிய இடங்களான பள்ளிக்கூடங்களை மதப் பிரச்சார மையங்களாக இந்த நடவடிக்கை பயன்படுத்தப் போவதை நினைத்தால் நமக்கெல்லாம் உள்ளூர ஒருவித அச்சம் ஏற்படுவதை மறுக்க முடியாது.

கணினி யுகத்தை சாதகமாக பயன்படுத்தி இவட்டாரத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தங்களுடைய கல்வித்தரத்தை அதிசயிக்கும் வகையில் உயர்த்திக் கொண்டுள்ளன. ஆனால் புதிய அரசாங்கத்தின் கீழ் கல்வித் தரத்தில் ஒரு மறுமலர்ச்சிக்காகக் காத்திருந்த நமக்கு இன்றுவரை ஏமாற்றம்தான். நாட்டின் கல்வித்தரம் உயர்வதற்கான அறிகுறியை கொஞ்சம் கூட காணவில்லை என்பதுதான் உண்மை.

பயங்கரவாதத்தைத் தூண்டக் கூடியவர் என உலகின் பல நாடுகள் முத்திரைக் குத்தியுள்ள ஜாக்கிர் நாயக்கை ‘இஸ்லாமிய உலகச் சின்னம்’ என உள்நாட்டு பல்கலைக் கழகம் ஒன்று தனது தேர்வுத் தாளில் குறிப்பிட்டுள்ளது மற்றொரு கேலிக் கூத்தாகும். பல்கலைக் கழகத்தின் தரத்தைதான் இது புலப்படுத்துகிறது.

ஒரு காலத்தில் பெரும் முற்போக்குவாதியாக இருந்த மகாதீரின் நேரடிப் பார்வையில் இதுவெல்லாம் நடப்பதுதான் அதிர்ச்சிக் கலந்த ஆச்சரியமாக இருந்த வேலையில் மகாதீர் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கை பதவியில் இருந்து தூக்கினார். இது ஒரு புதிய திருப்பம் எனலாம். எல்லாம் மகாதீர் என்ற சிந்தனையை இது உடைப்பதாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்தியாவின் புதிய குடியுறிமை சட்டத்தை அண்மையில் தாக்கிப் பேசிய மகாதீர், இந்நாட்டில் உள்ள  இந்தியர்களும் சீனர்களும் தகுதிபெறாத போதிலும் அவர்களுக்கு இங்கு குடியுறிமை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது நமக்கு பேரதிர்ச்சி மட்டுமின்றி சற்று வேதனையாகவும் கூட உள்ளது.

எனவே டொங் ஜியௌ ஸொங்கைப் போல நம்மிடையே சக்திவாய்ந்த கல்வி அமைப்புக்கள் ஏதும் இல்லாத போதிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் இதர அரசு சாரா அமைப்புகளும் நமது இனம், மொழி, சமயம் ஆகியவற்றை தற்காக்க இந்த 2020ஆம் ஆண்டில் கடுமையாகப் போராட வேண்டிய நிலைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளோம்.

மகாதீரின் அன்மைய நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் மீது அவர் கொண்ட அதிர்ப்தியை காட்டிகிறது. அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை நமக்கு புதிய நம்பிக்கையை தர வேண்டும், அதுவே அவர் தன் பதவிக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.