இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து மதத்தை சேர்ந்த மெஹாக் என்ற இந்து சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இந்து , சீக்கிய பெண்களை கடத்தி கட்டாயமாக மதமாற்றம் செய்து முஸ்லீம் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். மேலும் சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது, சிறுபான்மையினா் கொலை செய்யப்படுவது ஆகியவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாமிற்கு மாற நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜன., 14 ல் பாக்.,கின் சிந்து மாகாணத்தில் உள்ள உமர் கிராமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஜன.,15 ல் சிந்துவின் யாக்கோபாபாத் மாவட்டத்தில் உள்ள மெஹாக் (14) என்ற இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தல் நிகழ்வுகள் சிறுபான்மையினரின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இம்ரான் பேசியதாவது: பாகிஸ்தானில் நாங்கள் கட்டாய இஸ்லாம் மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க எங்கள் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள், அவர்களின் மத கட்டமைப்புகள் மீட்டெடுக்கப்படும். சிந்தில் மக்கள் பலவந்தமாக மாற்றப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதைச் செய்கிறவர்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியாது. இவ்வாறு கூறினார்.