கொரோனா வைரஸ் விவகாரம், பொருளாதாரத்தை பாதிக்கும் – அஸ்மின் அலி

கொரோனா வைரஸ் (2019-nCoV) பரவல் குறித்த, பொருளாதார விவகார அமைச்சர் முஹமட் அஸ்மின் அலி இன்று குறிப்பிடுகையில், நீண்டகால சூழ்நிலை நாட்டின் பொருளாதாரத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

மலேசியாவின் நிலைமை பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு நிலையை இன்னும் எட்டவில்லை என்பதால் மேலும் ஊகிக்க மறுப்பதாக அஸ்மின் கூறினார்.
“இந்த நிலைமை தொடர்ந்தால், கடந்த காலங்களில் ஏற்பட்ட மற்ற தொற்றுநோய் பரவல்களைப் போலவே, நிச்சயமாக இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். ஆனால் இது ஒரு தீவிரமான விசயம் என்பதால் இது சம்பந்தப்பட்ட அமைச்சுகளால் கண்காணிக்கப்பட வேண்டும். அடுத்த நடவடிக்கைகள் குறித்து நாங்கள் அவர்களிடமிருந்து தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே சீனாவின் வுஹான் மற்றும் ஹூபேய் பகுதிகளில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமி பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது. கொரோனா கிருமித் தொற்றால் மலேசியாவில் நான்கு சீன பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் 5 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாக அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சீனாவுடனான வர்த்தகத்தை குறிப்பாக வுஹானில் இருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக வர்த்தகத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை, என்று அஸ்மின் கூறினார். இருந்தபோதிலும், அரசாங்கம் நிலைமையை இலகுவாக எடுத்துக்கொள்வதற்கான அறிகுறி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.