சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்கள்:
கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது?
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காண முடியவில்லை.
11 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகை கொண்ட மத்திய சீன நகரமான வுஹானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்?
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளதாலும், அங்குள்ள மக்கள் வைரஸ்களை பரப்பும் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடர்ந்து பரவுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்க் வூல்ஹவுஸ்.
அறிகுறிகள் என்னென்ன?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.
இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது.
இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
பன்றிக்காய்ச்சல் மற்றும் இபோலாவை போன்று கொரோனா வைரஸ் தாக்குதலையும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த முடியுமா?
கொரோனா வைரஸின் பரவல் தானாக கட்டுக்குள் வராது என்பது உறுதிப்படத் தெரியவந்துள்ளதால், தற்போதைக்கு அதை கடுமையான முயற்சிகளின் மூலம் சீன அதிகாரிகளால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு.
அதாவது,
மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல்
அடிக்கடி கை கழுவுவதை ஊக்குவித்தல்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில், முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மருத்துவ பணியாளர்களை கொண்டு சிகிச்சை அளிப்பது.
கொரோனா வைரஸ் யாரிடமிருந்து/ எங்கிருந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரவியுள்ளது என்பதை கண்டறிதல்.
உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை
இன்றுவரை, உலகளவில் 2,798க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் சீனாவில் 2,741 பாதிப்புகள் உள்ளன (சீனாவின் WHO-இன் எண்ணிக்கை சீனாவில் தைவான் மற்றும் ஹாங்காங்கிலும் அடங்கும்).
இறப்பு எண்ணிக்கை இந்த நண்பகல் (ஜன. 28) நிலவரப்படி, சீனாவில் உள்ள அனைத்து நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.
WHO இன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவைத் தவிர, மற்ற 11 நாடுகளும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.
அவை தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மலேசியா.
சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
உலகில் முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய வுஹான் நகரை சீனா முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளது.
வுஹான் உள்ளிட்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளால் 36 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவில் மக்கள் கூடும் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன; சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி உட்பட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
வுஹானில் 1,000 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனையை ஆறே நாட்களில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு என்ன சிகிச்சை?
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும்.
மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.