கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் வகையில் சந்தையில் போதுமான அளவில் முகமூடிகள் இருப்பதை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது அமைச்சின் தற்போதைய முன்னுரிமைகளில் ஒன்று, என்று அதன் அமைச்சர் சைபுடீன் நாசுதீன் இஸ்மாயில் கூறினார்.
“நாங்கள் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்து, இறக்குமதியாளர்களுடன் (இறக்குமதியை அதிகரிக்க) இணைந்து செயல்படுவோம். அத்துடன் தேவையை பூர்த்தி செய்ய, உள்ளூர் உற்பத்தியாளர்களை உற்பத்தியை அதிகரிக்கச் சொல்வோம்”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முகமூடிகள், சில ஐரோப்பா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், சில உள்நாட்டிலும் தயாரிக்கப்படுகின்றன எனவும், அவை விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலின் கீழ் வருகின்றன, அதாவது அமைச்சு நிர்ணயித்த விலையைத் தாண்டி வணிகர்கள் அவற்றை விற்க அனுமதிக்கப்படுவதில்லை, எனவும் கூறினார்.
துணை பிரதம மந்திரி டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், சந்தையில் முகமூடிகளை போதுமான அளவில் வழங்குவதை உறுதி செய்யுமாறும், குறைந்த விலையில் விற்குமாறும் அமைச்சிடம் கேட்டுக் கொண்டதாகவும், சைபுடீன் தெரிவித்தார்.
நிலைமையைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இதுபோன்ற பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது அமைச்சின் அமலாக்கப் பணியாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் எச்சரித்தார்.