பெய்ஜிங், ஜனவரி 29 – சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 5,974ஐ எட்டியுள்ளது, மேலும் புதிய வைரஸ் பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதை சீனாவின் தேசிய ஸ்பட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நேற்று, சுகாதார அதிகாரிகள் 4,515 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பதிவுகள் இருப்பதாகவும், 106 நோயாளிகள் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
“ஜனவரி 28 நள்ளிரவு நிலவரப்படி (16:00 GMT), தேசிய சுகாதார ஆணையம் 59 மாகாணங்களிலிருந்து (மாவட்டங்கள், மத்திய அரசின் நேரடி அதிகார எல்லைக்குட்பட்ட நகரங்கள்) 5,974 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புக்களும், அதில் 1,239 பேர் மோசமான நிலையிலும் உள்ளனர் என தெரியவந்துள்ளது. 132 பேர் உயிர் இழந்துள்ளனர். மற்றும் 103 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹாங்காங்கில் 8, மக்காவில் 7 மற்றும் தைவானில் 8 என்று முறையே பாதிப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சுமார் 9,239 பேருக்கும் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில், கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 59,990 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள். -BERNAMA

























