அரசியலால் பந்தாடப்படும் கல்வி – இராகவன் கருப்பையா

நாடு சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறுத் துறைகளில் நாம் பரிநாம  வளர்ச்சிக் கண்டுள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு விசயம்.

2020 தூரநோக்குக் கொள்கையின் படி தொழில்துறையில் மலேசியா இவ்வாண்டு முழுமையான வளர்ச்சி கண்ட நாடாக மாறியிருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய நாம் தவறிவிட்ட போதிலும், பல துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், தொடர்புத்துறை போன்ற அத்தியாவசியத் துறைகளில் உலகின் முன்னணி நாடுகளுக்கு இனையான வளர்ச்சியை நாம் அடைந்துள்ளது பெருமைக்குறிய நிலைதான்.

ஆனால் நாட்டின் கல்வித்துறை மேம்பாடு மட்டும் இன்னமும் நமக்கு ஒரு எட்டாக் கனியாகவே இருந்துவருவதுதான் சற்று வேதனையாக உள்ளது.

நம் நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானைத் தவிர இதர எல்லா பிரதமர்களும் ஒரு காலக்கட்டத்தில் கல்வி அமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் நமது கல்வித்தரம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மேம்பாடு காணவில்லை என்பதுதான் கவலையான விசயம்.

கல்வி அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்தவர்களின் திறமையையும் ஆற்றலையும் வைத்துப் பார்க்கும் போது, ஆசிய ரீதியில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தென்கிழக்கு ஆசிய நிலையிலாவது நமது கல்வித்தரம் கனிசமான மேம்பாடு கண்டிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து மட்டுமின்றி சுமார் 20 ஆண்டுகாலம் அயரா போரில் அல்லோலப்பட்ட வியட்நாம் கூட நம்மை புறம் தள்ளி அசுர வளர்ச்சி கண்டுள்ளன.

அமைச்சு சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகளில் எஸ்.ஒ.பி. எனப்படும் ‘நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை’ கடைபிடிக்கப்படாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

கட்சி மற்றும் அரசியல் நலன்களை முன்னிருத்தி சில சமயங்களில் முடிவுகள் செய்யப்படுகின்றன.

இதுபோன்ற குளறுபடிகளினால் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமின்றி நாட்டின் எதிர்காலமும் கூட பாதிக்கப்படுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

தமது முன்னைய 22 ஆண்டுகால ஆட்சியின் போதே இத்தகைய குறைபாடுகளை நன்றாகவே உணர்ந்திருந்த துன் டாக்டர் மகாதீர் 1999ஆம் ஆண்டில் வித்தியாசமான ஒரு முடிவெடுத்தார்.

எப்பொழுதுமே யாரும் எதிர்பாராத வகையில் மாறுபட்ட முடிவுகளை துனிச்சலாக எடுப்பதில் வல்லவரான மகாதீர், டத்தோஸ்ரீ மூசா முஹமட் எனும் ஒரு கள்விமானை செணட்டராக்கி கல்வியமைச்சர் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

மூசா முஹமட் அந்த சமயத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார்.

அரசியல் கலப்பில்லாமல் நாட்டின் கல்வித் தரத்தை மூசா முஹமட் ஒரு நல்ல நிலையில் செம்மைபடுத்துவார் என்று எதிர்பார்த்த மகாதீருக்கும் நாட்டு மக்களுக்கும் எதிர்பாராத ஏமாற்றம்தான் மிஞ்சியது.

உற்சாகமாக தமது பணிகளைத் தொடக்கிய மூசா முஹமட், நாளடைவில் அமைச்சர் பதவியில் கிடைக்கும் அணுகூலங்களில் கவர்ந்து ஈர்க்ப்பட்டு ஒரு அரசியல்வாதியாக மாறத் தொடங்கினார்.

அதற்கு அடுத்து 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற 11ஆவது பொதுத் தேர்தலில் பினேங் மாநிலத்தில் ஒரு சீட்டுக்கு அடிபோட்ட அவரை யாரும் பொருட்படுத்தவில்லை.

ஆக அரசியல் கலப்பில்லாமல் மலேசிய கல்வித்துறையை மேம்படுத்த எண்ணிய மகாதீரின் திட்டம் அதோடு தவிடுபொடியானது.

பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் சன்னம் சன்னமாக தேசிய பள்ளிகளில் இஸ்லாமிய கல்வி சற்று அதிகமாகவே ஊடுருவத் தொடங்கியது. தேசியப் பள்ளிகள் இஸ்லாமியப் பள்ளிகளைப் போல மாறிவருகின்றன, அதனால்தான் சீன, இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தேசியப் பள்ளிகளில் குறைந்து வருகிறது என மகாதீரே பல காலக்கட்டங்களில் கருத்துரைத்திருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு கல்வியமைச்சராக நியமிக்கப்பட்ட மஸ்லி மாலிக்கும் ஒரு கல்விமான்தான். அவரும் மகாதீரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயலாற்ற முடியாமல் பதவி துறக்க நேரிட்டது.

எனவே தற்காலிகமாக அந்த பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பிரதமர், நாட்டின் கல்வித் தரத்திற்கு ஒரு புதிய விடியலை வித்திடுவார் என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த 1974ஆம் ஆண்டிலிருந்து 1978ஆம் ஆண்டு வரையில் மகாதீர் ஏற்கனவே ஒரு முறை கல்வியமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த கல்விமுறையைக் கொண்டுள்ள பின்லாந்து நாட்டுக்கு நிகராக நமது கல்வித்தரம் உயராவிட்டாலும் கூட குறைந்தபட்சம் ஆசிய அளவிலாவது முன்னேற்றம் காணவேண்டும் என்பதுதான் நமது ஆதங்கமாகும்.

பின்லாந்தின் தற்போதைய கல்வியமைச்சர் லீ எண்டர்சன் எனும் 32 வயது இளம் பெண்ணாவார்.

அவர்களுடைய கல்விமுறையில் துளியளவு கூட அரசியலோ சமயமோ கிடையாது. கல்வி மேம்பாடு மற்றும் நாட்டின் நலன் கருதிதான் அவர்களுடைய முடிவுகள் சார்ந்திருக்கின்றன.

அந்நாட்டில் மற்ற பல ஐரோப்பிய நாடுகளைப்போல கல்வி முற்றிலும் இலவசம். பல்கலைக் கழகம் செல்லும் வரையில் பரீட்சையும் இல்லை.

குழந்தை பருவம் முதல் வாழ்நாள் முழுவதும் தரமான கல்வியை ஒவ்வொருவரும் இலவசமாக பெருவதற்கான கல்வி கொள்கையையும் அதற்கேற்ற அமைப்பு முறைகளும் உள்ளன. குழந்தைகளின் திறன்களுக்கு ஏற்ற வகையில் பாடதிட்டமும் ஆசிரியர்களும் செயல்படுவதால் அவர்களின் கல்வி வழிமுறை அந்நாட்டு மக்களின் பண்பாட்டு அமைப்பு முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று உலகத்தில் சிறந்த கல்விமுறையை கொண்ட நாடுகளில் முதன்மை வகிக்கும் நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாகும்.

ஆக இடைக்கால கல்வியமைச்சராக பொறுப்பேற்று ஏறக்குறைய 1 மாதகாலம் நிறைவடையும் இத்தருணத்தில் மகாதீர் மனதில் என்னதான் இருக்கிறது என மக்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அவரால் சமயம் ஊடுருவியுள்ள சூழலில் இருந்து கல்வியையை காப்பாற்ற இயலுமா? நமக்கு ஒரு தரமான கல்வியையை வழங்க தற்போது உள்ள அமைப்புமுறைகளும் கல்வி திட்டமும் வழி வகுக்குமா?

அல்லது அரைகுறையாக முன்பு செய்தது போல் தாய் மொழி கல்வியை சீண்டும் வகையில் அறிவியல கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்க மீண்டும் முயற்சி எடுப்பாரா?

அடுத்த கல்வியமைச்சரை நியமனம் செய்வதற்கு முன் நாட்டின்  கல்வித்தர மேம்பாட்டுக்கு நிரந்தரமான ஒரு வழித்தடத்தை நிர்மாணித்து விடியல் விளக்கை ஏற்ற இவர் முயல  வேண்டும் என்பதுவே நமது அவா!