சீனாவின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வுஹானிலும் சிக்கியுள்ள மலேசியர்களை வெளியேற்ற மலேசிய இராணுவ விமானங்களை பயன்படுத்த சீனா அனுமதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா தெரிவித்தார்.
“உண்மையில், பாதுகாப்பு அமைச்சும் மலேசிய ஆயுதப்படைகளும் இதற்கு முன்னர் தங்கள் விமானங்களை பயன்படுத்த முன்வந்தன, ஆனால் சீனா பயணி வணிக விமானங்களை (commercial flights) மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதுபோன்று, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா)/National Disaster Management Agency (Nadma), விரைவில் 80 மலேசியர்களை பயணி வணிக விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரும் என்று சைஃபுதீன் கூறினார்.
“அவ்விமானம் மருத்துவ பணியாளர்களையும் கொண்டு செல்லும். மீண்டும் கொண்டுவரப்படும் மலேசியர்கள் சீனாவிலேயே சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் மலேசியா வந்தவுடன் மீண்டும் பரிசோதிக்கப்படுவார்கள். சிறிது நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்கானித்த பின் தான் அவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.
ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இதேபோன்ற ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால், ஹூபேயிலிருந்து வெளியேற்றுவதில் சீனா மலேசியாவுடன் ஒத்துழைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக சைஃபுதீன் கூறினார்.
மலேசியா 10 மில்லியன் ஜோடி ரப்பர் கையுறைகளை சீனாவிற்கு மருத்துவ பயன்பாட்டிற்காக வழங்கும் என்றும் சைபுதீன் கூறினார். மலேசியா தற்போது வாய் மற்றும் மூக்கு மூடிகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் அவை வழங்கப்பட மாட்டாது என்று அவர் கூறினார்.
சீனாவில் 35,000 மலேசியர்கள் உள்ளனர், 25,000 பேர் ஹாங்காங்கிலும், 2,500 பேர் பெய்ஜிங்கிலும் உள்ளனர், ஹூபேயில் 115 பேர் மட்டுமே உள்ளனர். சில மலேசியர்கள் இன்னும் ஹூபேவுக்கு திரும்பவில்லை என்பதால் அங்கு 80 மலேசியர்கள் மட்டுமே சிக்கியுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
மலேசியாவில் நேற்றைய நிலவரப்படி எட்டு கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.