அம்மா தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் இன்று காலமானார்.
செப்டம்பர் 18 ஆம் நாள், 1929-ஆம் ஆண்டு பிறந்த தோ புவான் தனது 90வது வயதில் இன்று மதியம் 130 மணியளவில் இயற்கையெய்தினார்.
‘கூட்டுறவுத் தந்தை’ என மலேசியர்களால் மதிக்கப்படும் துன்.வீ.தி. சம்பந்தனின் துணைவியாரான தோ புவான் உமா சம்பந்தன், மலேசிய மக்களால் கவரப்பட்ட உன்னத மனிதர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கலை, இலக்கிய, பண்பாடு சார்புடைய நிகழ்வுகளில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர் தனது முழுமையான ஆதரவையும் பங்கெடுப்ப்பையும் பெருமனதுடன் மேற்கொண்டவர்.
தோ புவான் அவர்களின் தந்தை சுப்ரமணியம், ஒரு பொறியியல் துறை நிபுணர் இவர் சிங்கப்பூர் கடற்படை பிரிவில் பணியாற்றியவர். தாயார் ஜெயலட்சுமி. இவர்களுக்கு தலைப்பிள்ளைதான் தோ புவான்.
பாரம்பரிய கலைகளை இளமை பருவம் முதலே ஆர்வம் கொண்டு கற்றவர் இவர். ஒரு பட்டதாரியான இவர் 1956-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி துன் வீ.தி.சம்பந்தனை கரம் பிடித்தார்.
தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து வாழ்ந்த பெருமை தோ புவான் அவர்களை சாரும். தேசிய நில நிதி கூடுறவு சங்கத்துடன் ஆரம்ப காலங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், பிறகு அதைலிருந்து விலகினார். இவருக்கு பெருந்துணையாக விளங்கியிவர் இவரின் ஒரே மகள் தேவகுஞ்சரி சம்பந்தனாகும்.
தோ புவான் தனது இறுதிகாலம் வரையில் ஒரு முழுமையான ஈடுபாட்டுடன் சமூக உறவுகளோடு பற்பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பார்க்கும் போதெல்லாம் புன்முறிவலுடன் தோன்றும் அவரின் அந்த தோற்றதிற்கு பின்னால் அர்பணிப்புடன் இயங்கியவர் தேவகுஞ்சரியாகும்
மஇகாவின் ஐந்தாவது தலைவரான துன் சம்பந்தன், விடுதலை மலேசிய தந்தைகளான துங்கு அப்துல் இராமான், டான் செங் லோக் ஆகியோரோடு இந்திய மக்களின் பிரதிநிதியாக இலண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில் ஒருவராவார்.
இவர் 1955 முதல் 1973 வரையில் மஇகாவின் தலைவராக இருதோடு பல துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர். ஒரு அமைச்சரின் பின்னணியில் இயங்கிய தோ புவான் தனது முழுமையான சமூக ஈடுபாட்டின் வழி மலேசிய இந்தியர்களின் மனதில் இடம் ஒரு நீங்காத இடத்தை பெற்றவர் எனலாம்.
தி ஸ்டார் இணைய செய்தியின்படி துன் சம்பந்தன் ஒரு நாள் பிரதமராக ஆகஸ்ட்டு மாதம் 1973-இல் இருந்திருக்கிறார். துன் அப்துல் இரசாக் கனடாவில் இருந்த சமயம் அதே நேரத்தில் துணை பிரதமர் துன் டாக்டர் ஸ்மையில் காலமானதால் ஏற்பட்ட சூழலில் அந்நிலை உருவானது. எனவே நமது நாட்டின் ஒரு நாள் முதல் பெண்மணி என்ற கௌரவ அந்தஸ்து கொண்டவராகவும் தோ புவான் உள்ளார்.