தற்பொழுது உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு விஷயம் ‘கொரோனா வைரஸ்’.
உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நோய்க்கிருமியினால் மலேசியா உள்பட 18கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் சீனாவில் 170கும் மேற்பட்டோர் பரிதாபமாக மரணித்துள்ளனர்.
சீனாவின் வுஹான் மாவட்டத்திலிருந்து பரவியதாகக் கூறப்படும் இந்தக் கொடிய நோய்க்கிருமி தற்போது அசுர வேகத்தில் பரவி வருவதால் உலகிலுள்ள எல்லா நாடுகளுமே பலதரப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருவது நாம் அறிந்த ஒன்றே.
பல நாடுகள் சீனாவுடனான அனைத்து போக்குவரத்திற்கும் தற்காலிகத் தடைகளை விதித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான தங்களது எல்லைகளை 3 நாடுகள் அதிரடியாக மூடிவிட்டன.
சீனாவைச் சுற்றி மொத்தம் 14 நாடுகள் எல்லைகளைக் கொண்டுள்ளன. அவற்றுள் மொங்கோலியா, ரஷ்யா மற்றும் நேப்பாளம், ஆகிய 3 நாடுகளும் பாதுகாப்புக் கருதி தத்தம் எல்லைகளை மூடியுள்ளன.
உலகின் பல நாடுகள் இவ்வாறு சீனாவை தனிமைபடுத்திவரும் வேளையில் மலேசிய அரசாங்கம் வுஹான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுடனான போக்குவரத்திற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. ஆனால் சபா மாநில அரசு அந்நாட்டுடனான அனைத்து போக்குவரத்திற்கும் தடையை அமல்படுத்தியுள்ளது.
மனிதர்களிடையே மிக துரிதமாகவும் சுலபமாகவும் பரவக் கூடிய இந்நோய் மலேசியாவுக்கு வருகைபுரிந்துள்ள சீன சுற்றுப்பயணிகளில் எண்மருக்கு பீடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி நமக்கு சற்று கலக்கத்தைதான் ஏற்படுத்துகிறது.
அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற போதிலும் வேறு யாரும் அந்தக் கிருமிகளை சுமந்துகொண்டு வெளியே இருக்கிறார்களா என்று தெரியாது.
இந்நிலையில், நம் நாட்டு மக்களின், குறிப்பாக மலேசிய இந்துக்களின் நலனை முன்னிறுத்தி, எதிர்வரும் 8ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைபூசத் திருநாளுக்கு அரசாங்கம் தடை விதிக்கக்கூடும் என்ற மெய்மையை நாம் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இது குறித்து கருத்துரைத்த துணை பிரதமர் டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா, தைபூசம் வழக்கம்போல கொண்டாடப்பட வேண்டும் என்ற போதிலும், டபள்யு. எச். ஒ. எனப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்காக மலேசியா காத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
சீனாவுக்கு வெளியே மொத்தம் 18 நாடுகளில் 100கும் மேற்பட்டோர் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதால், ‘உலகளாவிய சுகாதார அவசர நிலையை’ அந்நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் மிகப் பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் தைபூசத் திருவிழாவில் சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏறக்குறைய 15 இலட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
ஆக சுவாசக்காற்றின் வழி மிக எளிதில் பரவக்கூடிய இந்த தொற்று நோயினால் இவர்களில் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
எனவே இத்தகையதொரு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு தற்போதைக்கு பாதுகாப்பாக அமையாது என டபள்யு. எச். ஒ. மலேசிய அரசாங்கத்தை அறிவிக்கக் கோரினால் அவசியம் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத்தான் வேண்டும்.
இந்த நிலைப்பாட்டை நாம் அரசியல் கோணத்திலோ இன பாகுபாடு என்றோ பார்க்கக் கூடாது.
முருகப் பெருமானுக்கு வேண்டுதல், அர்ச்சனை, நேர்த்திக்கடன், பரிகாரம், முதலிய தவிர்க்க முடியாத பல சூழல்கள் நமக்கு இருக்கும் என்ற போதிலும் அவற்றுக்கான மாற்று வழிகள் குறித்து விவேகமாக நாம் சிந்திக்க வேண்டும்.
கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணிக்கு பத்துமலை கோயில் தேவஸ்தானம் ஒத்துழைப்பு வழங்காததால் 2 மாதங்கள் கழித்து நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை நம்மில் பெரும்பாலோர் புறக்கணித்ததை நாம் மறந்துவிட முடியாது.
ஆனால் இப்போது நாம் எதிர்கொள்வது அதுபோன்ற சூழ்நிலை இல்லை.
நமது அரசாங்கமும் முடிந்த வரையில் இத்திருநாளுக்கு தடையேதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு கடைசி வரையில் போராடும் என நிச்சயமாக நம்பலாம்.
எனினும் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நம் எல்லாருடைய நலனையும் கருத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது நம் அனைவருடைய கடப்பாடாகும்.
~இராகவன் கருப்பையா