ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: முதியவர் பலியான பரிதாபம்

ஜம்மு,பிப்.4– காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா நகர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 வயது முதியவர் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பல் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கர்னா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கர்னா பகுதியின் தாங்தாரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது’ என கூறினர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்தாண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 2,335 முறை, இந்திய ராணுவ நிலைகளையும், பொதுமக்களையும் குறிவைத்து, தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

-makkalkural