வெள்ளி இரத ஊர்வலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – செந்தூல் காவல்துறை எச்சரிக்கை

வியாழக்கிழமை வெள்ளி இரத ஊர்வலத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டிவிடுகிறவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க மாட்டார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

ஊர்வலம் சீராக இயங்குவதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும், அனைத்து தரப்பினரும் இன உணர்வை மதிக்கக் கற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செந்தூல் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி எஸ்.சண்முகமூர்த்தி சின்னியா கூறினார்.

“கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், திறந்தவெளியில் சத்தம் போடுவது, மது அருந்துவது போன்ற குற்றங்களைச் செய்கிறவர்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். சட்டத்தின் விதிகளின்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்,” என்று அவர் இன்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பத்து மலையை நோக்கிச் செல்லும் வெள்ளி ரதம், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அல்லது ஐந்து மணியளவில், செந்தூல் மாவட்டத்தைக் கடக்க விருப்பதால், அதன் சுற்றுப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட விருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், ஞாயிற்றுகிழமை இரவு, மீண்டும் அதே வழிகளில் வெள்ளி ரதம் திரும்பும்போதும் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருவிழா ஊர்வலத்தின் போது கோலாலம்பூர் காவல் தலைமையகத்தைச் சேர்ந்த சுமார் 700 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.