தீ விபத்தைத் தொடர்ந்து பினாங்கு மலையில் தீவிர கண்காணிப்பு

பினாங்கு மலையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, உள்ளூர் கவுன்சில் சட்டவிரோத நிலம் அழித்தல் தொடர்பான விஷயங்களுக்காக அந்த பகுதியை கண்காணித்து வருகிறது. அங்கு அங்கீகரிக்கப்படாத பல நில அழிப்பு நடவடிக்கைகள் நிகழ்வதாகத் தெரியவந்துள்ளது.

முன்னதாக, பினாங்கு, கெக் லோக் மற்றும் புக்கிட் பெண்டேராவுக்கு இடையில் இருக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட ஹெக்டர் காட்டுப் பகுதி தீக்கிரையானது.

அப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களுக்குச் செவ்வாய்க்கிழமை இரவில் தீ வைக்கப்பட்டதை அடுத்து, இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.

தீ பரவிய சம்பவம் குறித்துத் தங்களுக்கு இரவு 7 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டப் பின்னர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பி பூன் போ தெரிவித்தார். எனினும், காற்று வேகமாக வீசியதால், இரவு 10.30 மணி வரை தீ வேகமாக பரவியதாக அவர் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நெருப்பை அணைக்க முயன்றதாக தெரிகிறது.

அப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களுக்குத் திறந்த வெளியில் தீ மூட்டப்படுவதே இதற்குக் காரணம் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பி பூன் போ கூறினார்.