‘நான் ஒரு மலாய்காரர்; நான் என் இனம் மற்றும் மொழியை நேசிக்கிறேன்’ – மகாதீர்

‘நான் ஒரு மலாய்காரர்; நான் என் இனம் மற்றும் மொழியை நேசிக்கிறேன்’

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அவர் தன் இனம் மற்றும் மொழியை நேசிப்பதாகக் கூறினார்.

பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வலியுறுத்தல் செய்யப்பட்டது.

“நான் மலாய்க்காரர். நான் என் மலாய் மக்கள் மற்றும் மலாய் மொழியை நேசிக்கிறேன் ஆனால், இனத்தின் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும், என்று இன்று புத்ராஜெயாவில் உள்ள கல்வி அமைச்சில் மகாதீர் பேசினார்.

“உண்மையிலேயே, இனத்தை நேசிக்கிறீர்களானால், அதன் வெற்றியையும் முன்னேற்றத்தையும் முன்னுரிமைப்படுத்துங்கள். சொந்த மொழியின் பயன்பாட்டை மட்டும் முதலுரிமைப்படுத்தாதீர்கள், என்றார்.

அறிவு மற்றும் அறிவியலை புகுத்தும் ஒரு தளமாக ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

ஒரு தொழில்துறை மொழியாகவும் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் மகாதீர் வலியுறுத்தினார்.

“தொழிலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மொழி ஆங்கிலம். ஆங்கிலத்தில் அறிவியலைப் புரிந்து கொள்ளாதவர்கள் கொடுக்கப்படும் வழிமுறைகளை அல்லது கட்டளைகளை புரிந்துகொள்வது நிச்சயமாக கடினமாக இருக்கும்.

“இன்றும் கூட, ஆங்கிலத்தில் சரளமாக இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கடினமாக உள்ளது. சர்வதேச அறிவியல் மாநாடுகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. பொதுவாக ஆங்கிலம் மாநாட்டு மொழியா அமைந்திருக்கும்.

“நம் விஞ்ஞானிகளுக்கு ஆங்கிலம், அறிவியல் சரளமாக இல்லாவிட்டால், மாநாடுகளில் விவாதத்தை புரிந்து கொள்வது சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.