‘ஹராப்பானின் அழிவு’ குறிக்கும் கட்டுரைகள் குறித்து இரண்டு அமைச்சர்கள் கொந்தளிப்பு
பக்காத்தான் ஹராப்பான் அழிவின் விளிம்பில் இருப்பதாக அண்மையில் வெளியான கட்டுரைகளை, இரண்டு அமைச்சர்கள் கண்டித்துள்ளனர்.
சின்செவ் டெய்லி (Sinchew Daily) மற்றும் தி ஸ்டார் (The Star) வெளியிட்ட கட்டுரைகள் போலியான செய்திகள் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“நீங்கள் ஹராப்பாக்கு எதிரானவராக இருக்க விரும்பினால், தாராளமாக இருங்கள். ஆனால், போலி செய்திகளை மட்டும் நிறுத்துங்கள்” என்று கட்டுரைகளை இன்று பத்திரிகைகளுக்குக் காட்டிய லிம் கூறினார்.
லிம் குறிப்பிட்டுள்ள சின்செவ் டெய்லி கட்டுரை “பக்காத்தான் ஹரப்பன் சரிவின் விளிம்பில் உள்ளது” என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. அதை அதன் துணை ஆசிரியர் தே திங் யான் எழுதியுள்ளார்.
தி ஸ்டார் எழுதிய கட்டுரை “Possible revamp on the horizon” என்ற தலைப்பில், மூத்த பத்திரிகையாளர் ஜோசலின் தான் எழுதியுள்ளார்.
பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது தற்போதைய கூட்டணியில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் புதிய கூட்டணியை எதிர்பார்க்கிறார் என்றும் இரு பத்திரிக்கைகளும் ஊகித்துள்ளன.
இதற்கிடையில், மகாதீர், ஹராப்பானை ஏமாற்றிவிடுவார் என்று பரிந்துரைத்ததற்காக தேயின் கட்டுரை குறித்து நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்தார்.
“ஒரு சிலரின் அரசியல் பேராசையை பூர்த்திசெய்ய மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் தூக்கியெறியப்படலாம் என்ற கருத்து பயங்கரமானது, துரோகமுமாகும்” என்று அவர் கூறினார். தற்போதைய அரசாங்கம் “வலுவான மற்றும் நிலையானது” என்று அவர் கூறினார்.
“ஒரு பிரதமர் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பார் என்று குறிப்பிடுவது இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எவ்வாறாயினும், ஜனநாயகத்திற்கு விரோதமான வழிகளின் மூலம் ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது “மிகவும் தெளிவாக” இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார்.
பிப்ரவரி 21 ம் தேதி கூடிம் ஹராப்பான் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மகாதீர்-அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு பற்றிய புதிய பேச்சு வார்த்தைகள் குறித்து, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கட்சித் தலைவர்களிடமிருந்து கருத்துக்களைக் கோருகிறார் என்ற தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அதிகமான அம்னோ புள்ளிகள் இதைப்பற்றி தங்கள் கருத்துக்களை பகிரங்கமாகக் குரல் கொடுத்துள்ளனர். இன்று மாலை நடக்கும் அம்னோ உச்ச சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இவ்விசயம் முதலிடம் வகிக்கிறது என்பதை மலேசியாகினி அறிகிறது.