டெஹ்ரான், : ஈரான் விண்வெளி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்ட ‘ஜாபர்’ செயற்கைக் கோள், புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இதையடுத்து, ராக்கெட் சோதனை தோல்வியடைந்ததாக, ஈரான் அரசு அறிவித்தது.
மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. 2018ம் ஆண்டில், ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. கடந்த மாதம், அமெரிக்கா ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ராணுவ படைத் தளபதி குவாசிம் சுலைமானி, கொல்லப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஈரான், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஆண்டு, ஜனவரியில், ஈரான் ஒரு ராக்கெட்டை ஏவியது.
அந்த ராக்கெட்டில் உள்ள தொழில்நுட்பம், கண்டம் விட்டு கண்டம் தாண்டி, தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளிலும் பயன்படுத்தலாம் என்பதால், ஈரானை அமெரிக்கா சாடியது. அதற்கு பதிலளித்த ஈரான், அணு ஆயுதங்களை பயன்படுத்த, தாங்கள் விரும்பவில்லை என்றும், விண்வெளித்துறையில், கால் பதிக்கவே, அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் கூறியது. இந்நிலையில், அதே தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட் ஒன்றை, ஈரான் விண்வெளி மையம், நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது.
எனினும், அதிலிருந்து பிரிந்த செயற்கைக்கோள், புவி சுற்று வட்டப் பாதையில் நிறுத்தமுடியாமல் போனது. ஈரான் ராணுவ அமைச்சர் கூறியதாவது:’ஜாபர்’ என்ற செயற்கைக்கோள், ‘சிமோர்க்’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக ஏவப்பட்ட அந்த ராக்கெட், 540 கி.மீ., தொலைவு வரை சென்றது. விண்வெளியில், ஜாபர் செயற்கைக்கோள், ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. எனினும், போதிய வேகம் இல்லாத காரணத்தால், நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில், செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியவில்லை. வரும் காலங்களில், அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து, ராக்கெட்டுகளை விண்ணில் நிலை நிறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, கண்டம் விட்டு கண்டம் தாக்கும், ஏவுகணைகளை ஈரான் மேம்படுத்தப்படுத்தி வருவதாகவும், அதை மறைக்கவே, இதுபோன்ற ராக்கெட் சோதனைகளை, ஈரான் நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியது.