வெனிசுலாவில் தனி விமானம் மூலம் கடத்தப்பட்ட 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

வெனிசுலா நாட்டில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக விமானத்தை இடை மறித்து ஆய்வு செய்ததில் அதில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ அளவிலான போதைபொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கராக்கஸ்: வெனிசுலா நாட்டில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை தடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வான்வெளி எல்லைக்குள் நேற்று அத்துமீறி சந்தேகத்திற்கு இடமாக ஒரு சிறிய ரக விமானம் பறந்து சென்றது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட வெனிசுலா விமானப்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்த விமானத்தை இடைமறித்து அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தனர்.

பின்னர் அந்த விமானத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் மறைத்துவைத்து கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த விமானத்தை இயக்கிய பிரேசில் நாட்டை சேர்ந்த இரண்டு விமானிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

வெனிசுலாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 2.5 டன்கள் அளவிலான போதைபொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போதைபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • maalaimalar