புன்னகைத்தால் நீண்ட நாள் வாழலாம்: உலகின் மிக வயதான ஆண், ‘அட்வைஸ்!’

டோக்கியோ: “புன்னகைத்தால் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம்,” என, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள, உலகின் அதிக வயதான ஆண் கிதேத்சு வதனாபே, அறிவுரை வழங்கி உள்ளார்.

கிழக்காசிய நாடான ஜப்பானின் நிகாட்டா பகுதியில் வசிக்கும் கிதேத்சு வதனாபே என்பவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த, 1907ம் ஆண்டு பிறந்து, 112 ஆண்டுகள், 344 நாட்களாக நலமுடன் வாழ்ந்து வரும் அவர், உலகின் அதிக வயதான ஆண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தைவானுக்கு குடிபெயர்ந்த வதனாபே, 18 வருடங்கள், அங்கே வாழ்ந்தார். அங்கு, மிதுசூ என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு, ஐந்து குழந்தைகள் உள்ளனர். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், நிகாட்டா நகருக்கு திரும்பிய வதனாபே, மாவட்ட அரசு அலுவலகத்தில், ஓய்வுபெறும் வரை பணியாற்றினார்.

இப்போது, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அவருக்கு, அதற்கான சான்றிதழ், நேற்று வழங்கப்பட்டது. நீண்ட ஆயுளுடன் வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த வதனாபே, “கோபம் அடைய வேண்டாம்; புன்னகையுடன் இருங்கள்,” என்றார்.