தைபூசத்தில் குறைவான குப்பைகள், பண்பலைகளுக்கு பாராட்டு!


இந்த வருட பத்துமலை தைபூச திருவிழாவின் போது கண்களை குளிமையாக்கும் வகையில் இருந்தது மக்களின் செயல்பாடுகள். பெரும்பாலும் கைகளில் உள்ள குப்பைகளை கண்ட இடங்களில் போடும் மக்கள், இந்த வருடம் ஒரு மாற்றத்துடன் நடந்தது கொண்டது வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது.

இரத ஊர்வலம் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்துமலை நோக்கி நகன்ற போது நானும் அதில் கலந்து கொண்டேன். ஆயிரக்கணக்கான மக்கள். சாலை நெடுக உணவு, சுவைபானம், புட்டில்களில் நீர், பலகாரங்கள் இப்படி வாரி வாரி வழங்கப்பட்டன.

இரவு சுமார் 11 மணியளவில் ஜலான் பண்டாரிலிருந்து ஊர்வலம் நகர்ந்தது. பக்திபாடல்களின் எதிரொலிகள் நகரின் சாலைகளின் நான்கு திசைகளிலும் எதிரொலிக்க, சாரை சாரையாக பக்தர்களும் மக்களும் நகர்ந்தனர். போதுமான பாதுகாப்பும், அதற்கேற்ற மக்களின் நடத்தையும் காண்பதற்கு பெருமிதமாக இருந்தது.

இரதம் மெதுவாக நகர்ததால், நாங்கள் கூட்டத்துடன் கூட்டமாக முன்னால் நகர்ந்து செல்ல வேண்டியிருந்தது.

போகும் வழியில் போதும், போதும் என்ற அளவுக்கு உணவும் நீரும் வழங்கப்பட்டன.

“அக்கா இந்தாங்க”, “அம்மா உங்களுக்கு”, அண்ணா இதை வாங்கிங்க” என்ற உபசரிப்பு அளவில்லா விருந்தோம்பலாக நடப்பவர்களின் மனதை ஊடுருவியது எனலாம்.

பிலாஸ்டிக் (நெகிழி) புட்டில்களில் நீர், குளிர்ந்த பானங்கள், ஸ்டைரோபாம் (மெத்து) கப்களில் காப்பு, டீ பானங்கள், பாயாசம், கரும்புச்சார், நெகிழிப் பொட்டலங்களில் பலகாரம், சாதம், மீகோன், நாசி லெமா, தோசை, வடை, கரிபாப், சுண்டல், இடியாப்பம், இப்படியாக பலவகையான, சுவையான உபசரிப்பு உணவுகள் கடல் அலை போல மக்களை சூழ்ந்தன எனலாம்.

ஒரு கணம், நமது இனமாக இப்படி என்று மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு அசத்தியது. பொதுநலம் போர்க்கொடி உயர்த்தி, நமது கசங்கி கிடந்த மரியாதையை உயர்த்தி பிடித்தது போலிருந்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீழ்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

இப்படியாக வாங்கும் உணவுப்பொட்டலங்களையும், நெகிழிப்பைகளையும், புட்டிகளையும், மெத்து கப்களையும் என்ன செய்யப்போகிறார்கள், எங்கு போடப்போகிறார்கள். இவையெல்லாம் குப்பைகளாக தெருவை அலங்கோலமாக்குமே என்ற எண்ணம் ஒரு பயத்தை உருவாக்கியது.

எவ்வளவு குப்பைகள் என்று கணக்கு போட கண்கள் குப்பைகளை தேடின.

ஏமாற்றம்தான் மிஞ்சியது எனலாம். அங்கொண்றும் இங்கொன்றும் கமுக்கமாக போடும் நபர்களை தவிர பலர் தங்கள் கைகளில் எடுத்துக்கோண்டு  நடந்தனர். கடந்த வருடங்களின் குப்பைகள் மீது நடந்தது இன்னமும் தோன்றி மறைந்தது.

பலர் குப்பை தொட்டிகளை தேடி தேடி கொண்டு போய் அதில் போட்டனர். ஒரு சிறுவன் தூர நின்று ஒரு புட்டியை குப்பை தொட்டியில் போட வீசினான். அது தள்ளி போய் விழுந்தது. அவனை அப்படி செய்யக்கூடாது என்று சொல்லலாம் என்று நினைக்கையில், அவன் ஓடி சென்று எடுத்து மீண்டும் குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றான்.

அவ்வப்போது, உட்கார்ந்து களைபாரும்போதும், அந்த இடத்தை விட்டு நகரும் போது சிலர் தாங்களின் குப்பைகளை அப்படியே விட்டுச் சென்றனர்.

இதனிடையே தண்ணீர் பந்தல் நடத்துபவர்களும் அதில் இருந்த தொண்டுழியர்களும் குப்பைகள் போடுவதற்காக இடங்களை தயார் படுத்தியும் வைத்திருந்தனர். மேலும் சில குழுவினர் ‘ஒரு முறை பயன்படுத்தும்’ நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.  இதில் பல்லின மக்கள் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்திருந்தது.

கடந்த வருடத்தைவிட இவ்வருடம் குப்பைகள் பற்றிய ஒரு விழிப்புணச்சியை  கண்கூடாக கான முடிந்தது. மறுநாள் காலை 5.00 மணிக்கு கூட்டத்தோடு கூட்டமாக சுமார் 14 கிலோமீட்டரை கடந்து பத்துமலையை அடையும் போது ஒரு மன திருப்தியும் மகிழ்வும் உண்டானது. அது பக்திபரவசத்தால் என்பதை விட நமது மக்களின் அந்த மாற்றம் அந்த உணர்வை அளித்தது.

இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக இருப்பவர்களில் முதன்மையானவர்கள் இதற்கான விழிப்புணர்வுக்காக செயல்பட்டவர்கள் ஆவர்.

குறிப்பாக நமது ஊடகங்கள் பெரும்பாங்காற்றியுள்ளன.

மின்னல் எப்எம் (Minnal FM) மற்றும் டிஎச்ஆர் ராகா(THR Raga) ஆகியவை தொடர்ச்சியாக மக்களுடன் ஒரு தொடர்பை உண்டாக்கி அதன் வழி ஓர் ஆழமான சிந்தனையை சமயத்தோடு இணைத்து வழங்கியது பாராட்டுக்குறியது.

தைபூச திருநாளுக்கு முன்னதாகவே பக்தி பாடல்களை ஒலிபரப்பி அதன் வழி அவர்களுக்கான பக்தி பரவசத்தை அளித்ததோடு, சுத்தமான சூழலும் அதற்கு எப்படி மக்கள் பங்காற்றலாம் என்ற ஆலோசனைகளும், அதிகமான குப்பைகளினால் உண்டாகும் தூய்மைகேட்டையும் தொடர்சியாக ஒலியேற்றி, மக்களுக்கு போய் சேரும் வகையில் பங்காற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.

நமது தமிழ் பண்பலைகளுக்கும், இந்த விழிப்புணர்வுக்கு வித்திட்ட ஒவ்வொருவரும் பாராட்டுக்கள்.

  • மலேசியகிணி -தமிழ்ப் பகுதி