கால்நடை, ஆட்டு கொட்டகைகள் இடிக்கப்பட்டன.

கால்நடைகள், ஆட்டு கொட்டகைகள் இடிக்கப்பட்டன.

கிள்ளான், பிப்ரவரி 17 – மசூதி இருப்பு மற்றும் நதி இருப்பு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அத்துமீறியதை கண்டறியப்பட்டதால் இங்குள்ள பண்டார் போதானிக் ஜாலான் ரெம்பியா 2-இல் ஒரு கால்நடை மற்றும் ஆட்டு கொட்டகையும், கோயில் கட்டிடமும் இடிக்கப்பட்டன.

1965-ஆம் ஆண்டு தேசிய நிலக் கோட்பாட்டின்/Kanun Tanah Negara 425 மற்றும் 426A (1) பிரிவுகளின் படி கட்டட அமைப்பின் உரிமையாளர்களுக்கு முன்னதாக மூன்று நோட்டிஸ¤கள் வழங்கப்பட்டும் அத்துமீறல்களைத் தொடர்ந்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் மாவட்ட தலைமை உதவி அதிகாரி முகமட் ஷாஹ்ரிசால் முகமட் சல்லே கூறினார்.

“இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் மாடு, ஆடு கொட்டகைகள், கிடங்குகள் மற்றும் கோயில்களைக் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்காக நவம்பர் 13, 2006, அக்டோபர் 7, 2017 மற்றும் ஜனவரி 9 ஆகிய தேதிகளில் கட்டமைப்புகளின் உரிமையாளர்களுக்கு அவ்விடத்தை காலி செய்ய நோட்டிஸ் அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

இந்த நிலத்தில் அத்துமீறியதால், சுங்கை அவுர் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை (5-ம் கட்டம்) நிர்மாணிப்பதைத் தடுத்ததாகவும், சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையின் சீன முஸ்லீம் ஜமேக் மசூதி கட்டுமானத்தை தடுத்ததாகவும் கண்டறியப்பட்டது என்று முகமட் ஷாஹ்ரிசால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1965-ஆம் ஆண்டு தேசிய நிலக் கோட்பாடு பிரிவு 425ன் கீழ் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஒரு குற்றமாகும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு RM500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், கோயிலின் உரிமையாளருக்கு இந்த கட்டிடத்தை இடமாற்றம் செய்ய இன்று முதல் ஒரு வார காலம் வழங்கப்பட்டதாக முகமட் ஷாஹ்ரிசால் தெரிவித்தார். அதன் பின்னரும் அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அமலாக்க பிரிவினால் அக்கட்டிடம் இடிக்கப்படும் என்றார்.

கோலா லங்காட் கால்நடை வளர்ப்பு இடமாற்றத் திட்டத்தின் கீழ் (Projek Translokasi Penternakan Lembu di Kuala Langat) மாநில அரசு முன்னதாக இவர்களுக்கு இரண்டு புதிய கால்நடை இடங்களையும், கோயிலின் புதிய இடமாக கோலா லங்காட்டில் ஒரு நிலத்தையும் வழங்க முன்வந்ததாக அவர் கூறினார். தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் மூலம் இந்த வாய்ப்பை முன்னால் மாநில அரசு வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டனர்,” என்று அவர் கூறினார்.

இடிப்பு நடவடிக்கை இன்று கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகம் (பி.டி.டி), கிள்ளான் நகராட்சி மன்றம் (எம்.பி.கே), கிள்ளான் JPS, கிள்ளான் கால்நடை துறை, தெனகா நேஷனல் பெர்ஹாட் மற்றும் ஆயிர் சிலாங்கூர் பெர்ஹாட், ஆகியவை இணைந்து, மலேசிய காவல்துறை மற்றும் சுமார் 50 FRU உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் நடந்தது.

பெர்னாமா பார்வையிடுகையில், கொட்டகையின் உரிமையாளருடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் ஒரு குழு, பி.டி.டி அமலாக்க அதிகாரிகள் இடிப்பதைத் தடுக்க முயன்றபோது ஒரு கலவரத்தை ஏற்படுத்தினர். ஆனால் இறுதியில் தேவையற்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை, மற்றும் நடவடிக்கை முடியும் வரை நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தது என்று தெரிந்தது.