முதியவர்களை எச்சரிக்கும் சீனாவின் முதல் ஆய்வு அறிக்கை – தகவல்கள் என்ன?
கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீன மருத்துவ அதிகாரிகள், 44,000 பேருக்கு அதிகமானோரின் தகவல்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் வயதானவர்களே ஆபத்தில் இருப்பதாகவும், 80 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது என்றும் சீன நாட்டின் தேசிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை வுஹான் நகரத்தில் முக்கிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
51 வயதான லியோ ஜிம்மிங் வுஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளில் ஒன்றான வுசங் மருத்துவமையின் தலைமை மருத்துவர் ஆவார்.
சீன நாட்டில் இதுவரை மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணம் வுஹான் மாகாணம் ஆகும்.
இந்த மாகாணத்தில் நோய் தாக்கியவர்களில் இறப்பு விதிகம், 2.9% சதவீதமாக உள்ளது. ஆனால், மற்ற மாகாணங்களில் நோய் தாக்கியவர்களில் இறப்பு விகிதம் 0.4 சதவீதமாக உள்ளது. இத்தகவலை நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை சீனாவில், நாடு முழுவதிலும், நோய் தாக்கியவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 1,868
இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தகவலின் படி இதுவரை 1,868 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். மேலும் 72,436 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கள்கிழமை மட்டும் 98 பேர் இறந்துள்ளனர் . மேலும் 1,886 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 93 பேரும் பாதிக்கப்பட்டவர்களில் 1,807 பேரும் ஹுபேயை சேர்ந்தவர்கள்.
12 ஆயிரம் பேர் இதுவரை குணமாகியுள்ளனர் என சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீன அரசு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை
சீனாவில் தேசிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், சீன கொள்ளை நோயியல் சஞ்சிகையில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிப்ரவரி 11 வரை சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 44,672 பேர் பற்றிய தகவல்கள் ஆராயப்பட்டுள்ளன.
இதில் பலரும் கொரோனா வைரஸைப் பற்றி முன்பிருந்த வரையறைகள் மற்றும் அறிகுறிகளை வைத்து கண்டறியப்பட்டவர்களே ஆவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விரிவான வகைப்பாடுகளும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 80.9% பேர் தொடக்க நிலையில் இருப்பதாகவும் 13.8% பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4.7% பேர் கவலைகிடமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இறப்பவர்களில் 80 வயதுக்கு அதிகமானோரின் விகிதம்தான் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலின அடிப்படையில், பெண்களைக்(1.7%) காட்டிலும் ஆண்கள்( 2.8%) தான் அதிகம் இறப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய் பெரிதும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக நீரழிவு, சுவாசக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகளை பார்க்கும்போது , 3,019 பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 1,716 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 11 வரை 5 பேர் இறந்துள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
bbc.tamil