கெஅடிலான் கட்சியின் 22 ஆண்டு கால வரலாற்றில் கடும் இக்கட்டான சூழ்நிலையை நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அது சந்தித்தது. கட்சியின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் குறிப்பாகத் தேசிய உதவித் தலைவராக உள்ளவர் தனது கட்சிக்குப் பெரிய துரோகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
ஒரு அரசியல் கட்சியில் பல பிரச்சனைகள் இருக்கலாம், அதற்கு மிகவும் பொறுப்புடன், கட்டுக்கோப்புடன் தீர்வுகாண்பதுதான் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அழகு. ஆனால், கட்சியின் தலைமைத்துவத்தில் இருப்பவர்களே கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து செயல்படுவது கடைந்தெடுத்த துரோகச் செயலாகும்.
கட்சித் தலைவர்களும் மக்கள் நலன் மேம்பட 60 வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் சுய தேவையை பூர்த்திச் செய்து கொள்ள அலைவதும், பதவி வெறியை நிறை வேற்றிக் கொள்வதற்கு லட்சக்கணக்கான உறுப்பினர்களை மட்டுமின்றி பக்காத்தான் ஹராப்பானை நம்பி வாக்களித்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் நம்பிக்கையைச் சிதறடிப்பது, பெரிய துரோகமாகும்.
அது மன்னிக்க முடியாத குற்றம். அப்படிப்பட்டவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கும், இது போன்று கீழறுப்பு செயல்களில் ஈடுபடுவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சி தயங்கக் கூடாது, கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர் ஹூரைடா கமாருடின் ஆகிய இருவரையும் கட்சி நீக்கியுள்ளதை வரவேற்கிறோம் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
நாட்டில் நல்ல ஆட்சி அமைக்க மக்கள் 60 ஆண்டுகள் தவம் புரிந்துள்ளார்கள். மக்களுக்காக, நாம் ஏற்படுத்திய கூட்டணிக்கு எதிராக, சொந்தக் கட்சிக்கு எதிராக கட்சித் தலைவர்களே ஆட்சிக் கவிழ்ப்பில் இரங்குவதோ, அல்லது நம்பி வாக்களித்த மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்வது மதி கெட்ட செயலாகும்.
இப்படிப்பட்ட செயலை மேற்கொண்டவர் எவராக இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும், அப்படிப் பட்டவர்களுக்கு இந்தக் கட்சியில் மட்டுமல்ல, எந்தக் கட்சியிலும் இடமில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் மலேசியச் சமுதாயம் தண்டனை வழங்க வேண்டும். அதுவே மக்களை மதிக்கும், மக்களின் நம்பிக்கையை உயிர்மூச்சாகக் கொள்ளும் பழக்கம் கொண்ட இளம் சமுதாயத்தை நாட்டில் உருவாக்கும்.
நாடு சுகாதார, பொருளாதாரச் சீர்குலைவுகளைச் சந்தித்துள்ள இவ்வேளையில், நாட்டையும் மக்களையும் இந்த இக்கட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு, அரசியல் கீழறுப்புகளில் ஈடுபடுவது பொது மக்கள் நலனுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் துரோகம் என்பதால் கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர் ஹூரைடா கமாருடின் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது சரியான நடவடிக்கை என்கிறார் சேவியர் ஜெயக்குமார்.