பிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள் அதிகரிப்பு

பிரேசிலில் போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் குற்றங்கள் அதிகரித்ததோடு, கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலியா: பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீரா மாகாணத்தை சேர்ந்த போலீசார் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நாட்டு சட்டத்தின்படி போலீசார் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும் அண்மையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த மாகாண கோர்ட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போலீசார் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.

அதோடு போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனாலும் போலீசார் போராட்டத்தை கைவிட மறுத்து, வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் சீரா மாகாணத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிக அளவில் கொலைகள் நடக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக சீரா மாகாணம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் துப்பாக்கிகளை கையில் ஏந்தி வீதிகளில் ரோந்து வருகின்றனர்.

maalaimalar