‘போர்க்குற்றம்: இலங்கை தப்ப முடியாது:’ பிரான்ஸ் எச்சரிக்கை

பாரிஸ்: ஐ.நா., சபையின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை எடுத்துள்ள முடிவிற்கு, பிரான்ஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின், ஆசியாவிற்கான இயக்குனர் தியர்ரி மேத்து தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தில், குறைந்தது ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க, 2015ம் ஆண்டு ஐ.நா.,வின் மனித உரிமைப் பேரவை தீர்மானம் கொண்டுவந்தது. அந்த தீர்மானத்தில் இருந்து விலகுவதாக, இலங்கை அரசு, ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா., மாநாட்டில் தெரிவித்துள்ளது.

தீர்மானத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தால், அந்த தீர்மானம் மறைந்து விட்டது என்று அர்த்தமல்ல. தீர்மானம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. எந்த ஒரு நாடும் பயங்கரவாதத்தை வளர்ப்பதை ஐ.நா., ஏற்காது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடக்கும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா., நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா., தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை எடுத்துள்ள முடிவிற்கு ஐ.நா., சபையின் மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷலட், ‘இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வித்தியாசமான முறையில் நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது. நல்லிணக்கம், மனித உரிமைகளை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்தான தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது’ வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், பிரான்சும் தன் கண்டத்தை பதிவு செய்துள்ளது.
‘இது இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்’ என, எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
dinamalar