காபூல்: ஆப்கனில், முஸ்லிம் சிறுபான்மையினரின் தலைவரான அப்துல் அலி மசாரி நினைவஞ்சலி கூட்டத்தில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 27 பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், முஸ்லிம்களில் சிறுபான்மை பிரிவினரின் தலைவரான அப்துல் அலி மசாரி, தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டு, 25 ஆண்டுகள் ஆகின்றன. காபூலில், நேற்று அப்துல் அலியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், ஆப்கன் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, அப்துல்லா உட்பட, பலர் பங்கேற்றனர்.அப்போது, அருகில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து, துப்பாக்கியுடன் வந்த சிலர், நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை, சரமாரியாக சுட்டு தள்ளினர்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், குண்டுகள் பாய்ந்து, 27 பேர் இறந்தனர்; காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கனில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறுவதற்காக, அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களில், இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.
இதற்கு தாங்கள் பொறுப்பில்லை என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ”துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, அடுக்குமாடி கட்டடத்தில் பதுங்கி இருக்கும் நபர்களை வெளியேற்ற, பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,” என, உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், நஸ்ரத் ரஹிமி தெரிவித்தார்.
dinamalar