அமெரிக்க அதிபர் வேட்பாளர் முன்னிலையில் ஜோ பிடன்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், 77, முன்னிலையில் உள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதற்கான கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும், காகஸ் மற்றும் பிரைமரி தேர்தல் நடந்து வருகிறது. குடியரசு கட்சி சார்பில், மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். அக்கட்சியில் அவர் மீண்டும் வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.இதற்கிடையே, ஜனநாயகக் கட்சி சார்பில், வேட்பாளர் தேர்வுக்கான போட்டி கடுமையாக உள்ளது. தற்போதைய நிலையில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் சென்ட், எம்.பி.,யான பெர்னி சான்டர்ஸ், 78, போட்டியில் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பிரைமரி தேர்தலில், மிகவும் முக்கியமான மிக்சிகன் மாகாணத்தில், ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம், அதிபர் வேட்பாளர் தேர்தலில், மேலும் முன்னிலை பெற்றுள்ளார்.கட்சியின் பிரதிநிதிகள் ஓட்டளித்து அதிபர் வேட்பாளரை தேர்வு செய்கின்றனர். மொத்தமுள்ள, 3,979 பேரில், 1,991 பேரின் ஆதரவு பெறுபவரே வேட்பாளராக முடியும்.இதுவரை நடந்த பிரைமரி தேர்தல்களில், ஜோ பிடனுக்கு, 788 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சான்டர்சுக்கு, 633 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.

கடந்த, 2016ல் நடந்த பிரைமரி தேர்தலில், மிக்சிகன் மாகாணத்தில், ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக, சான்டர்ஸ் வெற்றி பெற்றிருந்தார். தற்போது அந்த மாகாணத்தில், ஜோ பிடன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியர்கள் ஆதரவுஅதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பணியாற்ற, பல்வேறு அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. டிரம்பின் தேர்தல் குழுவினர், பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அவர்களிடம், பல்வேறு அமெரிக்க வாழ் இந்தியக் குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், புளோரிடா அருகே நடந்த பிரசார கூட்டத்தில், இந்தியர்களை பாராட்டி, டிரம்ப் பேசினார். மேலும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, பல அமெரிக்க வாழ் இந்தியர்களின் சேவைகளை குறிப்பிட்டு, மேடைக்கு அழைத்து பாராட்டினார்.

dinamalar