கொரோனா வைரஸ்: விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா, எச்சரிக்கும் ஜெர்மனி, முடங்கிய இத்தாலி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பா செல்ல, மற்றும் அங்கிருந்து வர பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்க நேரப்படி சற்று நேரத்திற்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா செல்லும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் அடுத்த 30 நாட்களுக்குத் தடை செய்வதாக அறிவித்தார்.

இந்த தடையானது இன்று இரவு முதல் அமலாகும்.

ஆனால், அதே நேரம் பிரிட்டன் செல்ல, வர எந்த தடையும் கிடையாது. பிரிட்டனில் 460 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

டிரம்ப், “கொரோனா பாதிக்கப்பட்ட யாரும் எங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தடை,” என்றார்.

அமெரிக்காவில் 1,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் பலியாகி உள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு டொனால்டு டிரம்ப் கொரோனா தொடர்பாகப் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “கடந்த ஆண்டு சாதாரண காய்ச்சல் காரணமாக அமெரிக்காவில் 37 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக இதன் காரணமாக 27 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பலியாகின்றனர். எதுவும் முடக்கப்படவில்லை, வழக்கம் போலதான் பொருளாதாரமும் உள்ளது. இப்போது வரை கொரோனாவால் 22 பேர்தான் பலியாகி உள்ளனர். இது குறித்துச் சிந்தியுங்கள்,” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

சரி. சர்வதேச அளவில் கொரோனா தொடர்பாக நடந்த விஷயங்களைப் பார்ப்போம்.

தீவிரமான நடவடிக்கை தேவை

கொரோனா ஒரு உலகளாவிய தொற்று நோய் எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், “சீனாவுக்கு வெளியே கொரோனாவின் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் 13 மடங்கு அதிகரித்துள்ளது,” என்றார்.
மேலும் அவர், “கொரோனா வைரஸ் தொற்றைக் குறைக்க உடனடியாக மற்றும் தீவிரமான நடவடிக்கை தேவை,” என்றார்.

பல நாடுகள் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமென நிரூபித்துள்ளன என்று தெரிவித்த அவர், “நாம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமாக நிச்சயம் இந்த கொரோனாவை கட்டுப்படுத்தலாம்,” என்றார்.

ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சிலா மெர்கல், “ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீத பேருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார். ஆனால் அதே நேரம் இந்த வைரஸை பரவாமல் தடுக்க முடியும், அதில்தான் நாம் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் 4,584 பேர் பலியாகி உள்ளனர். 124, 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே மிக மோசமாக இத்தாலி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் இந்த வைரஸ் தொற்றால் 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 827 பேர் பலியாகி உள்ளனர். 900 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இத்தாலி நாட்டில் ஏறத்தாழ அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீதிகள் ஆள் அரவமற்று காணப்படுகிறது.

விசா வழங்குவதை நிறுத்திய இந்தியா

இந்தியர்கள் வெளிநாட்டிற்குப் பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தால், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜரீக அதிகாரிகள், ஐநா அல்லது சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள், பணி நிமித்தப் பயணம், அலுவல் திட்ட ரீதியான விசாக்களை தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் விசா இன்றி இந்தியாவுக்குப் பயணம் செய்ய வழங்கப்பட்ட வசதி ஏப்ரல் 15, 2020 வரை இடைநிறுத்திவைக்கப்படுகிறது.

இப்படியான சூழலில், ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய முடியாது என டோக்கியோவில் ஆளுநர் யூரிகோ கோக்கே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டாம் ஹேங்க்ஸ்

தாமும் தமது மனைவி ரீடா வில்ஸனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

63 வயதான ஹேங்க்ஸ் ஆஸ்கர் விருது பெற்றவர்.

தமக்கும் மற்றும் வில்சனுக்கும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவரின் உதவியை நாடியதாக கூறுகிறார்.

எனவே இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹேங்க்ஸ் படப்பிடிப்பிற்காக கோல்ட் கோஸ்டில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார்.

மேலும் நோய் தொற்று குறித்துத் தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.