1 எம்.டி.பி நிதியை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மகாதீர்.
கிளெப்டோக்ராசி எதிர்ப்பு விசாரணையில் இருந்து மீட்கப்பட்ட 1MDB பணத்தை மலேசியாவுக்கு திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா “இருமுறை யோசிக்க வேண்டும்” என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 1MDB வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் அப்பணத்தை திருப்பித் தருவதற்கு முன்பு அமெரிக்கா “இருமுறை யோசிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
94 வயதான மகாதீர், கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். முகிதீன் யாசின் பின்னர் பிரதமரானார். முகிதீனின் கூட்டணியில் முன்னாள் ஆளும் கட்சியான அம்னோவும் அடங்கியுள்ளது. பல பில்லியன் டாலர் ஊழல் தொடர்பாக 2018 பொதுத் தேர்தலில், வாக்காளர்கள் அக்கட்சியை நிராகரித்த போதிலும் முகிதீனின் கூட்டணியில் அம்னோ இடம்பெற்றுள்ளது.
அம்னோவின் கீழ் 1MDBயிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இப்போது விசாரணையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் திருடப்பட்ட பணத்தில் சிலவற்றைப் பெற்றதாகவும் அமெரிக்க நீதித்துறை (DoJ) தெரிவித்துள்ளது.
DoJ, அதன் மிகப் பெரிய க்ளெப்டோக்ராசி எதிர்ப்பு வழக்கில், 1MDB நிதியில் வாங்கியதாகக் கூறப்படும் சொத்துக்களைக் கைப்பற்றுதல் மற்றும் விற்பனை செய்வதிலிருந்து சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்டெடுத்துள்ளது.
மே மாதத்தில் DoJ கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை மலேசியாவிற்கு திருப்பி அனுப்பியது, ஆனால் மகாதீர் பதவி விலகியதைத் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் கடந்த மாதம் சுமார் 240 மில்லியன் அமெரிக்க டாலர் பரிமாற்றம் தாமதமானது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
நஜிப்பின் கட்சி அரசாங்கத்திற்கு திரும்பிய பின்னர் மலேசியாவிற்கு பணத்தை அனுப்பும் முடிவை DoJ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மகாதீர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
“நாங்கள் பொறுப்பேற்றபோது, பணத்தை திருடிய நபர்களை நாங்கள் தூக்கியெறிந்ததால், பணத்தை எங்களிடம் கொடுக்க DoJ தயாராக இருந்தது,” என்று அவர் ஒரு பேட்டியில் கூறினார்.
“இப்போது, பணத்தை திருடியவர்களே அவர்கள் திருடிய பணத்தை திரும்பப் பெறப் போகிறார்கள். DoJ நன்கு சிந்திக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”
2009 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நஜிப் அவர்களால் நிறுவப்பட்ட 1MDBயில் குறைந்தது ஆறு நாடுகள் பண மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
2018-இல் எதிர்பாராத தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மகாதீர் 1MDB மற்றும் நஜிப்பின் நிதி ஈடுபாடு குறித்த விசாரணைகளை மீண்டும் திறந்தார்.