வாஷிங்டன், மார்ச் 14 – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தேசிய அவசரநிலையை அறிவித்தார் என்று அனடோலு செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாநில மற்றும் உள்ளூர் முயற்சிகளுக்கு உதவ 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதிக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த அனுமதிக்கும் என்று டிரம்ப் கூறினார்.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான 10 முக்கிய நிகழ்வுகள்:
அமெரிக்காவில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,701ஆக உள்ளது. இதுவரை 40 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். பள்ளிகளை மூடுவது, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மிகப்பெரிய கூட்ட நிகழ்வுகளுக்குப் பல மாகாண அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது ஐரோப்பா இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். மிகத் தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும், இந்தத் தீயை எரிய விடாதீர்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவிலேயே கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 250 பேர் மரணித்துள்ளனர். இதுவரை அங்கு மொத்தமாக 1,266 பேர் பலியாகியுள்ளனர். 17,660 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியை அடுத்து மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு நாடான ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை அன்று பலி எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து 120-ஐ தொட்டது. அங்கு மட்டும் சுமார் 4,231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,876ஐ எட்டியுள்ளது. இதுவரை 79 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.
ஜெர்மனியில் 3,062 கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.