வணக்கம் – உலக தலைவர்களை கவர்ந்த இந்திய கலாசாரம்

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும் 139 கோடி இந்தியர்களும் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம், அடடே, நமது இந்தியாவின் கலாசாரம், உலக தலைவர்களையெல்லாம் தொற்றிக்கொண்டிருக்கிறதே என்று.

டிசம்பர்-1, 2019 வரலாற்றின் ஒரு கருப்பு புள்ளியை கொரோனா வைரஸ் பதிவு செய்த நாள்.

இந்த நாளில்தான் இன்று உலகையே உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிற, பதற்றத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் சீன நாட்டின் உகான் நகரில் ஒருவரை தாக்கியது கண்டு பிடிக்கப்பட்டது.

இப்போது அதன் ஜாதகம் இது-

பூமிப்பந்தில் இந்தியா உள்ளிட்ட 132 நாடுகளில் தாக்கம்

1 லட்சத்து 38 ஆயிரத்து 937 பேருக்கு பரவல்

5,111 உயிர்ப்பலிகள்.

இந்த உயிர்க்கொல்லி வைரசுக்கு இன்னும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத பரிதாப நிலை தொடர்கதையாய் நீளுகிறது.

195 உலக நாடுகளில் 132 நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி விட எஞ்சிய 63 நாடுகளும் தங்கள் நாட்டுக்கும் அழையா விருந்தாளியாக வந்துவிடுமோ இந்த கொரோனா வைரஸ் என்று பதற்றத்தில் தவிக்கின்றன.

இந்த வைரசை தடுக்க என்னதான் வழி என்றால் மிக முக்கிய வழி, ஒருவரோடு ஒருவர் உடல் ரீதியிலான தொடர்பில் இல்லாமல் இருப்பதுதான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். குறிப்பாய் கை குலுக்கல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள். கை குலுக்குகிறபோதே கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவிவிடும்.

மேற்கத்திய நாடுகள் தொடங்கி உலக நாடுகள் பலவற்றிலும் தலைவர்கள், பிற நாட்டு தலைவர்களை, தூதர்களை, விருந்தினர்களை வரவேற்கும் முறையே இந்த கை குலுக்கல்தான்.

இப்போது என்ன செய்வது என உலகமே தவிக்கிறது.

ஆனால் உலக தலைவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பது கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரம்தான்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது கடந்த 24-ந் தேதி அவரை வரவேற்று ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நமஸ்தே டிரம்ப் (வணக்கம் டிரம்ப்) என்று என்ன நேரத்தில் பெயர் சூட்டினார்களோ இன்றைக்கு ‘நமஸ்தே’ என்னும் வணக்கம் உலக தலைவர்களிடம் எல்லாம் பரவி வருகிறது.

கை குலுக்கலிலும், கட்டித்தழுவுவதிலும் பெயர் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இதற்கு விதி விலக்கல்ல. நேற்று முன்தினம் அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வந்து தன்னை சந்தித்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கரருடன் கை குலுக்கவும் இல்லை. கட்டித்தழுவவும் இல்லை. டிரம்பும், லியோ வரத்கரரும் ஒருவருக்கொருவர் கை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். இந்த காட்சி உலக தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டு மக்களின் கவனத்தை கவர்ந்தது.

“நாம் இப்படி வணக்கம் தெரிவித்துக் கொள்ளலாம் (கை கூப்புகிறார்). இந்தியாவிடம் இருந்து இப்போதுதான் திரும்பி இருக்கிறேன். அங்கு யாருடனும் நான் கைகுலுக்கவில்லை. இது எளிதாகத்தான் இருக்கிறது” என்று சொல்லி புன்னகைத்தார்.

அவருக்கு முன்பாக அவரது நண்பரும், இஸ்ரேல் பிரதமருமான பெஞ்சமின் நேட்டன்யாஹூ முந்திக்கொண்டு விட்டார். நாட்டு மக்கள் யாரும், யாரையும் கை கூப்பி வணக்கம் என்று சொல்லுங்கள் போதும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவரும் அதையே பின்பற்றுகிறார். தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.

இந்தியாவின் வணக்கம் தெரிவிக்கும் கலாசாரம், இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மட்டும் விட்டு விடுவாரா?

அவர் சார்பில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவல் லெனைன் டுவிட்டரில் ஒரு பதிவே போட்டு விட்டார். என்னவென்று?

“இந்தியாவுக்கு 2018-ம் ஆண்டு சென்றிருந்தபோது, அங்கு அதிபர் மேக்ரான் கண்டறிந்த கலாசாரம் வணக்கம் தெரிவிக்கும் கலாசாரம். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இனி அவர் வணக்கம் சொல்லித்தான் வாழ்த்து தெரிவிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறார்”.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது இணையத்தில் வைரலாகி வருவது அடுத்த சுவாரசியம்.

லண்டனில் நடந்த இளவரசர் அறக்கட்டளை விருது விழாவில் பங்கேற்றவர்களுக்கு அவர் கை கூப்பி வணக்கம் தெரிவித்தது அனைவரையும் ஈர்த்து விட்டது.

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும் 139 கோடி இந்தியர்களும் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம், அடடே, நமது இந்தியாவின் கலாசாரம், உலக தலைவர்களையெல்லாம் தொற்றிக்கொண்டிருக்கிறதே என்று.

maalaimalar