துணைப் பிரதமர்: “வெற்றி அடைந்த பல இன நாடுகளில் மலேசியாவும் ஒன்று”

பல்வேறு துறைகளில் பல இன ஒத்துழைப்பை வலுப்படுத்துவதின் மூலம் நாட்டின் அமைதியையும் ஒத்துழைப்பையும் நிலை நிறுத்தும் போக்கைத் தொடர பாரிசான் நேசனல் அரசாங்கம் (பிஎன்) உறுதி பூண்டுள்ளது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார்.

அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவையும் அந்த ஒத்துழைப்பில் அடங்கும். அவை நாட்டுக்கு அமைதியையும் நிலைத்தன்மையையும் வளப்பத்தையும் கொண்டு வந்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த நாட்டில் எந்த இனத்தையும் ஒதுக்காமால் அனைத்து இனங்களுடைய நலன்களையும் தொடர்ந்து பாதுகாக்கவும் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதனால் வளப்பத்தை அனைவரும் அனுபவிப்பது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

“சீன சமூகத்தினர் நியாயமாக நடந்து கொள்வர் என்றும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வர்த்தகம் செய்யும் பொருட்டு நிலைத்தன்மை கொண்ட ஒற்றுமையான மலேசியாவை காண அவர்கள் எப்போதும் விரும்புகின்றனர் என்றும் நான் நம்புகிறேன்.”

கோலாலம்பூரில் நேற்றிரவு சீன சங்கங்களின் சம்மேளனத்தின் (ஹுவா ஸொங்) 20வது ஆண்டு நிறைவு விருந்தில் முஹைடின் உரையாற்றினார்.

மலேசியா “ஒர் எடுத்துக் காட்டு”

“அரசாங்கமும், நாட்டின் பல இன மக்களும் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் விளைவாக மலேசியா நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளது. அதனால் நாம் பெருமை கொள்வதுடன் மற்ற நாடுகளுக்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறோம்.”

நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுநாள் வரையில் அமைதி, நிலைத்தன்மை, வளப்பம் ஆகியவற்றைக் கட்டிக் காப்பதில் நல்ல வெற்றி கண்ட நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். அந்தத் துறையில் நாம் அடைந்துள்ள சாதனையை இந்த உலகில் பெரும்பாலான பல இன நாடுகள் அடையவில்லை.”

பரஸ்பரம் புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, மரியாதை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் வளமான, அமைதியான பல இன நாடாக மலேசியா உருவெடுத்துள்ளது என்றும் முஹைடின் சொன்னார்.

பெர்னாமா