அமெரிக்காவில் அனைத்து மாநிலங்களுக்கும் பரவியது கொரோனா… ஒரு மாதத்திற்குள் 105 பேர் பலி

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.

வாஷிங்டன்: ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலும் இந்நோய் வேகமாகப் பரவியுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் பிப்ரவரி 26-ம் தேதி கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு மாநிலமாகப் பரவி உயிரிழப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. நேற்று வரை அமெரிக்காவில் கொரோனா வைரசால் 105 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6500ஐ தாண்டி உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நியூயார்க் மற்றும் மேற்கு பகுதியில் வாஷிங்டன் ஆகிய மாநிலங்களின் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கொரோனாவை தீவிரமாக பரவும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்ததையடுத்து, உலகம் முழுவதும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த வைரசின் தாக்கம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பயண கட்டுப்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு அறிவுறுத்தல்களால் ஏராளமான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். நியூ ஜெர்சியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

maalaimalar