கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன நிலை ?

கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன நிலை ?

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 84,114ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இத்தாலியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான். இதன் மூலம் இத்தாலியில் மட்டும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும், இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 35,713ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸின் மையமாக விளங்கும் லொம்பார்டி பிராந்தியத்தில் மட்டும் நேற்று இந்த நோய்த்தொற்றால் 319 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவுக்கு வெளியே இந்த நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி விளங்குகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 8,758 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்தவர்கள்.

சீனாவின் நிலை என்ன?

இதனிடையே, தங்கள் நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று எதுவும் நேற்று (புதன்கிழமை) பதிவாகவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று கடந்தாண்டு சீனாவில் தொடங்கிய நிலையில், இது பெரும் மைல்கல்லாக கருதப்படுகிறது.

பல நாடுகள் சமூக கட்டுப்பாடுகள் விதித்தல், முக்கிய நிகழ்வுகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள், வைரஸின் பரவலை கட்டுப்படுத்தி சுகாதார அமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

“எனினும், கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் தங்களது குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சையளிக்க வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஒரு “நம்ப முடியாத சாதனை” என்று டெட்ரோஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

வட கொரியாவில் மழலையர் பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி முதல் பொதுவான விடுமுறையில் இருந்துவரும் சூழலில், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

ஆனால், மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

மற்ற ஐரோப்பிய நாடுகளின் நிலை என்ன?

ஒட்டுமொத்த இத்தாலியும் சுமார் இரண்டு வார காலமாக முடக்கப்பட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் பரவலும், அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இத்தாலியை போன்று மற்ற ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பாக, ஸ்பெயினில் இதுவரை 13,716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598ஆக அதிகரித்துள்ளது.

பிரான்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை வரை 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104ஆக அதிகரித்துள்ளது.
ஜெர்மனியை பொறுத்தவரை, 8,198 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உள்ளது.

அதே போன்று, பெல்ஜியத்தில் இந்த நோய்த்தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் புதன்கிழமை வரை 237 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 302 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. -BBC.TAMIL