அமைதிப்பேரணி மசோதா தீய நோக்கம் கொண்டது- முன்னாள் போலீஸ் அதிகாரி

முன்னாள் போலீஸ் விசாரணை அதிகாரி ஒருவர்- கடந்த வாரம் மக்களவையில் இரண்டாம் வாசிப்புக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட- அமைதிப் பேரணி மசோதா தீய நோக்கம் கொண்டது என்கிறார்.

கோலாலம்பூர் குற்றவியல் புலனாய்வுத்துறை முன்னாள் தலைவர் மாட் சைன் இப்ராகிம், அம்மசோதா “பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி” என்றார்.

“நஜிப் அம்மசோதாவைக் கொண்டுவந்து பலர் எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத்தாது  விரைந்து  நிறைவேற்றியதன் நோக்கம் என்ன?.

“அவரது முறைகேட்டையும் அரசாங்க நிர்வாகத்தில் முன்பு இருந்தவர்கள் செய்த, இப்போது உள்ளவர்கள் செய்து வருகின்ற அதிகார அத்துமீறல்களையும் எதிர்த்து கண்டனக்கூட்டங்களும் அமைதி ஆர்ப்பாட்டங்களும் நிகழாமல் தடுப்பதற்காக அது கொண்டுவரப்பட்டதா?”, என்றவர் வினவினார்.

அரசாங்கம் அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் காண்பித்த அவசரமே, மக்களை “அடக்கி ஒடுக்கும்” தீய நோக்கத்துடன் அது கொண்டுவரப்பட்டிருப்பதை நிரூபிக்கிறது என்று அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கூறினார்.

சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லின் மேற்பார்வையில் அச்சட்டம் உருவாக்கப்பட்டது.அண்மையில் வெளிவந்த தகவலை வைத்துப் பார்க்கும்போது அவரது நேர்மையே  “சந்தேகத்துக்குரியது” என்றாரவர்.

அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தது மக்களின் உரிமைகளை ஒரு குற்றவாளியின் கரங்களில் கொடுத்ததற்கு ஒப்பாகும் என்று நறுக்குத்தெறித்தாற்போலக் கூறினார் மாட் சைன்.

“அம்மசோதாவுக்கு எதிராக எம்பிகள் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். அதுவே நாகரிகமான, அறிவுபூர்வமான, பாராட்டத்தக்க செயல். அதற்கெதிராக தெரு ஆர்ப்பாட்டம் செய்வது நிலைமையை மேலும் மோசமாக்கும்”.