கொரோனா வைரஸ்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

தங்களது நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் 3,245 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்தாலும், அந்த தரவின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

எனினும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து சீனாவே முன்னிலையில் உள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா வைரஸால் 81,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 41,035ஆக உள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 12ஆம் தேதி இத்தாலியில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்கம் வரும் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த முடக்கத்தின் காரணமாக வீடுகளுக்குள்ளேயே இருந்த நிலையிலும், அந்த நாட்டில் கட்டுக்கடங்காத அளவுக்கு கொரோனா வைரஸ் பரவல் இருந்து வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,030 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,517ஆக உயர்ந்துள்ளது.

மற்ற நாடுகளின் நிலை என்ன?

தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான வெளிநாடுகளில் வசித்து வரும் தென் கொரியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் தத்தமது நாடுகளுக்கு திரும்பி வரும் சூழ்நிலையில், இந்த நாடுகளில் இரண்டாவது முறையாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீர் ஏற்றம் ஏற்பட கூடும் என்று கருதப்படுகிறது.

ஈரானில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டியுள்ள நிலையில், எதிர்வரும் பெர்சியன் புத்தாண்டை நாட்டு மக்கள் பொதுவெளிக்கு வராமல், வீடுகளுக்குள்ளேயே கொண்டாட வேண்டுமென்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தங்களது குடிமக்கள் அல்லாதோரை தவிர்த்து மற்றவர்களுக்கு நாட்டின் எல்லைகளை மூடியுள்ளன.

அமெரிக்காவில் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மட்டுமின்றி இந்த நோய்த்தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் ஊதியத்தை உறுதிசெய்யும் திட்டம் உள்ளிட்டவற்றிற்காக 100 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட கலிஃபோரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதே விகிதத்தில் உயர்ந்தால் அடுத்த மூன்று மாதங்களில் சுமார் இரண்டு கோடி மக்கள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட கூடும் என்று அந்த மாகாணத்தின் கவர்னர் கேவின் நியூசோம் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளனர்; 14,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலகின் பல்வேறு நாடுகள் தத்தமது நாடுகளில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை உடனடியாக நிறுத்துவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. மேலும், ரயில்கள், பேருந்துகள், வாடகை கார் சேவைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.

பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பிய மத்திய வங்கி 820 பில்லியன் டாலர்கள் கொண்ட அவசர தொகுப்புதவி திட்டத்தை அறிவித்துள்ளது.

தென் அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் முடக்கத்தை அறிவித்த முதல் நாடாக அர்ஜெண்டினா உருவெடுத்துள்ளது. இதன்படி, மார்ச் மாத இறுதிவரை உணவு மற்றும் மருத்துவத்தை தவிர்த்து வேறெந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

bbc.tamil