கோவிட்-19: சுகாதார அமைச்சரின் தவறான ஆலோசனையால் மக்கள் குழப்பம்!

இராகவன் கருப்பையா – கோவிட்-19 எனும் கொடிய தொற்று நோய் மலேசியா முழுவதும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முறையான வழிமுறைகள் தெரியாமல் பெரும்பாலோர் இன்னும் அவதிப்படுகின்றனர்.

கடந்த 16ஆம் தேதியும் பிறகு 18ஆம் தேதியும் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இரு முறை நாட்டு மக்களுக்கு இந்த நோய் குறித்து பல விசயங்களை தெளிவுபடுத்த முற்பட்டார்.

இருந்த போதிலும் அதன் தொடர்ச்சியாக சுகாதார அமைச்சை சார்ந்தவர்கள் மக்களுடைய குழப்பங்களுக்கு இன்னும் முழுமையாகத் தீர்வு காணவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில் நமது புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் அட்காம் பாபா, வெந்நீர் குடித்தால் கோவிட் வைரஸ் வயிற்றுக்குள் சென்று அங்குள்ள அமிலதன்மையால் இறந்து விடும் என்ற தவறான தகவலை நேற்று மாலை டிவி 1 -இல் கூறியது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

உலக சுகாதார மையம் (WHO) வெந்நீர் குடிப்பதால் கோவிட் 19 சாகாது என்கிறார்கள், அதற்கு காரணம் கோவிட் வைரஸ் மூக்கின் வழியாக நுரையீரலுக்கு சென்று அங்கு பாதிப்பை உண்டாக்கிரது.  வயிற்றுக்கும் இதற்கும் சம்பந்தம்மில்லை.

இந்த இக்கட்டான சூழலில் இப்படிப்பட்ட அமைச்சர் தேவையா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் விமர்சனமாகியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு நாட்டின் அரசியல்வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா மட்டுமே முக்கியமானப் பணிகளை தனியாகவே கையாண்டதை நாம் மறக்க இயலாது. அந்த சமயத்தில் சுகாதார அமைச்சராக யாருமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நோய் கடுமையான நிலையை அடைந்துள்ள இத்தருணத்தில் அமைச்சின் செயல்பாடுகளைப் பார்த்தால் அதிகாரிகள் சற்று இலக்கற்று இருப்பதாகத் தெரிகிறது. எஸ்.ஒ.பி. எனும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை இல்லாமல் அவர்கள் தவிப்பதைப் போல் தோன்றுகிறது.

குறிப்பாக, வீட்டிலேயே இருங்கள், வெளியே வராதீர்கள் என திரும்பத்திரும்ப கிளிப்பிள்ளையைப் போல் எல்லாருமே ஒரே மாதிரி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்களேத் தவிர நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற மக்களின் குழப்பத்திற்கு அவர்கள் இன்னமும் தெளிவான ஒரு தீர்வை எடுத்துரைக்கவில்லை.

இந்நோய் தொற்றியிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் சோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லும் சிலர், வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பணிக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் சோதனை செய்யப்படுகின்றனர்.

ஆக இந்த செயல்பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை இல்லாததால் நோய் எந்த நிலையில் இருக்கும்போது தனிமைப்படுத்திக் கொள்வது, எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்வது, தனிமையில் இருக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் யாவை, எப்போது மருத்துவ சோதனைக்கு உள்படுத்திக் கொள்வது போன்ற விவரங்கள் தெரியாமல் பலர் அல்லோலப்படுவதாகத் தெரிகிறது.

வட்ஸப் புலனத்தில்தான் நூற்றுக்கணக்கான வழிமுறைகளும் வைத்தியங்களும் மருந்து வகைகளும் வந்த வண்ணமாக மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறதேத் தவிர சுகாதார அமைச்சில் இருந்து தெளிவான எளிமையான விளக்கங்கள் வந்ததாகத் தெரியவில்லை.

ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற தப்லிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இன்னும் சோதனை செய்யப்படவில்லை என அரசாங்கம் அறிவித்தது.

அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் ரோஹின்யா அகதிகள் அல்லது சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் என்று நம்பப்படுகிறது.

இவர்கள் எல்லாரையும் அடையாளம் கண்டு சோதனைக்கு உள்படுத்துவதில் அரசாங்கம் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நடைமுறை இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய இக்கட்டான ஒரு மருத்துவ பேரிடரை இதற்கு முன் எதிர்நோக்கிய அனுபவம் நமக்கு இல்லைதான். இருந்த போதிலும் இந்த கோவிட்-19 நோயை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ள சீன அரசாங்கத்திடம் இருந்து ஆக்கரமான சில வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்வதில் தவறில்லை.

எனவே இக்கொடிய நோய் பரவாமல் இருப்பதற்கு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப முடிந்த வரை வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது ஒருபுறமிருக்க, நோய்க்கான அறிகுறி உள்ள ஒருவர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு கட்டம் கட்டமாகத் தெளிவுபடுத்த வேண்டியது சுகாதார அமைச்சின் கடமையாகும்.