தேசிய ஸ்குவாஷ் விளையாட்டாளரான நிக்கோல் ஆன் டேவிட், நாட்டின் தலைசிறந்த வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனை என பிரதமர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அவர், உலக ஸ்குவாஷ் விருதைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஈடு இணையில்லாதது என்றும் அவர் வருணித்தார்.
புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் தம்மை மரியாதை நிமித்தம் சந்தித்த நிக்கோலை வரவேற்ற பின்னர் நஜிப் நிருபர்களிடம் பேசினார்.
நிக்கோல் அடைந்துள்ள வெற்றி, தங்கள் விளையாட்டுக்களில் மற்ற விளையாட்டாளர்களும் சிறந்த நிலையை அடைவதற்கு தூண்டுகோலாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“மலேசிய அரசாங்கம், மக்கள் சார்பில் நான் நிக்கோலுக்கு உளங்கனிந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்,” என்றார் நஜிப்.
அந்தச் சந்திப்பின் போது நிக்கோலின் பெற்றோர்களான டெஸ்மண்ட் டேவிட்டும் ஆன் மேரி டேவிட்டும் உடனிருந்தார்கள்.
அப்போது சிஐஎம்பி குழும நிர்வாக இயக்குநர் நாசிர் ரசாக்-கும் அங்கிருந்தார்.
“நிக்கோல் முன்மாதிரியாகக் கருதப்பட வேண்டும். காரணம் நம் நாட்டின் வரலாற்றில் அவர் மிகவும் வெற்றி அடைந்த விளையாட்டுச் சின்னம்,” என நஜிப் வருணித்தார்.
நிக்கோல் எதிர்காலத்தில் மென்மேலும் பல வெற்றிகளை அடைந்து சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்திய நஜிப், அது நாட்டின் விளையாட்டுத் திறனுக்குக் குறிப்பாக ஸ்குவாஷ் துறைக்கு சிறந்த அளவுகோலாக விளங்கும் எனக் குறிப்பிட்டார்.
பிரதமரைச் சந்தித்தது, தமக்கும் தமது பெற்றோர்களுக்கும் உண்மையில் அர்த்தமுள்ள நிகழ்வு என நிக்கோல் வருணித்தார்.
அரசாங்கத்திடமிருந்தும் மலேசியர்களிடமிருந்தும் அங்கீகாரம் பெற்றுள்ளது எனக்கும் என் குடும்பத்துக்கும் கிடைத்துள்ள மகத்தான கௌரவமாகும். அனைத்து ஆதரவுக்கும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்,” என்றார் அவர்.
பெர்னாமா