கொரோனாவின் கொலைவெறியை தென் கொரியா கட்டுப்படுத்தியது எப்படி?

சீயோல்: கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், 2வது இடத்தில் இருந்த தென்கொரியா, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, தற்போது, 9வது இடத்துக்குச் சென்றுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 2012ம் ஆண்டு உருவான மெர்ஸ் (MERS – Middle East respiratory syndrom) என்ற சுவாசத் தொற்று நோய், தென்கொரியா உட்பட, 21 நாடுகளுக்குப் பரவியது. சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்த நோயால் அதிக மக்களைப் பலி கொடுத்த நாடாக தென்கொரியா இருந்தது.இதனால், தென்கொரியாவில் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையங்களை அதிநவீனப் படுத்த சிறப்புத் துறை அமைத்தனர். பல்வேறு நோய்க் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்தனர். அந்த மையங்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படவர்களை சோதனை செய்ய பேருதவி செய்து வருகின்றன.

ஒரு நாளுக்கு 20,000 பேர்

உலகிலேயே வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு, ஒரு நாளுக்கு, 20 ஆயிரம் பேருக்குக் கொரோனா சோதனை நடத்துகிறது தென்கொரியா.
உலகிலேயே அதிக அளவிலான மக்கள், தென் கொரியாவில் தான் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதற்காக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், கொரோனா வைரசால், சீனாவுக்கு அடுத்தபடியாக, அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த தென்கொரியா தற்போது, வைரசைக் கட்டுப்படுத்தி, பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது.
கடந்த பிப்., மாதத் துவக்கத்தில் வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த தென் கொரியா, தற்போது 9வது இடத்துக்குச் சென்றுள்ளது.
தென்கொரியாவில் தற்போது, 9,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உள்ளது.

கட்டாய சமூக இடைவெளி

கொரோனா தொற்று பரவலை உறுதி செய்தவுடன், வணிக வளாகங்கள், தேவாலயங்கள், இரவு விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களும் உடனடியாக மூடப்பட்டன. சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
‘தென்கொரியாவில் மேற்கொள்ளப்படும் வைரஸ் சோதனைகளே, கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியுள்ளது’ என, உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இதனால், தென் கொரியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களை கொடுத்து உதவுமாறு தென்கொரியாவிடம் வல்லரசு நாடான அமெரிக்கா உதவிகோரி கையேந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் துவங்கிய, கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும், 19 ஆயிரம் பேரின் உயிர்களை பலி கொண்டுள்ளது.

இதனால் கொரோனாவைக் கண்டு, மொத்த உலகமும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டு மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.
கொரோனா வைரசால் தற்போது இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு, உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

dinamalar