கொரோனா வைரஸ்: பலத்த அடிவாங்கிய அமெரிக்க பொருளாதாரம்

கடந்த பிப்ரவரி 4 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அப்போது அவர், “வேலைவாய்ப்புகள் அதிகமாகின்றன. வருமானங்கள் உயர்கின்றன. ஏழ்மை நிலை சரிந்து வருகிறது. குற்றங்கள் நடப்பது குறைகிறது, நம்பிக்கை மலர்கிறது, நமது நாடு செழிப்பாகிறது” என்று தெரிவித்தார்.

21.44 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருளாதாரத்தை குறித்து அப்போதுஅவர் உற்சாகமாக பேசினார்.

இந்நிலையில் நீங்கள் இன்னொரு தகவலையும் தெரிந்துகொள்ள வேண்டும். சீனாவின் மொத்த உள்நாட்டு விற்பனை மதிப்பு 14.4 ட்ரில்லியன் டாலர்களாகவும், இந்தியா 2.8 ட்ரில்லியன் டாலர்களாகவும் மற்றும் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு விற்பனை மதிப்பு 320 பில்லியன் டாலர்களாகவும் இருக்கிறது.

சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி சுமார் 500 பேர் பலியாகி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் இருந்த தரவுகள் இவை.

அப்போது அமெரிக்காவில் கொரோனாவால் பெரும் பாதிப்பு இருக்கவில்லை.

கடுமையான வீழ்ச்சி

சிறிது காலத்திற்கு முன்னர்தான் அமெரிக்க பங்கு சந்தைகள் புதிய உச்சத்தை அடைந்திருந்தன. மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 3.6 சதவீதமாக குறைந்திருந்தது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது குறைந்து காணப்பட்டது.

ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாகியுள்ளது.

அமெரிக்காவில் 53,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 700 பேர் இறந்துள்ளதாகவும் அந்நாடு கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது.

தொழில்கள், பள்ளிகள், விளையாட்டு நிகழ்வுகள் என அனைத்தும் மூடப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பங்கு சந்தைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.

“இது போன்ற ஒரு நிலையை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை… இது நெருக்கடி காலம்” என்று முதலீட்டாளர் ரே டாலியோ சி.என்.பி.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

கோரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களுக்கு 4 டிரில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படக்கூடும் என்று ரே டாலியோ கணக்கிடுகிறார். மேலும் பலரும் இதனால் பணமின்றி தவிப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் பெரிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் சில முன்னறிவிப்புகளை பார்த்தால், இதன் தாக்கத்தின் அளவு மோசமாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

கோல்ட்மேன் சாக்ஸின் பொருளாதார வல்லுநர்கள் கூர்மையான மந்தநிலையை கணித்துள்ளனர். முதல் காலாண்டில் 6% சரிவுக்குப் பிறகு, இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24% வீழ்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது அதிர்ச்சி அளிக்கக் கூடியவகையாக இருக்கிறது.

இந்நிலையில் ஜே.பி மோர்கன் நிறுவனம் இது குறித்து ஆய்வு செய்ததில், அமெரிக்க பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 14% சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“மக்கள் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள்”

இதனை தொடர்ந்து வரும் வாரங்களில் வேலைவாய்ப்பின்மை 4 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என்று மார்ச் 23ஆம் தேதி நட்ததபட்ட மதிப்பீட்டில் ஜே.பி மார்கன் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மைக்கெல் ஃபெரோலி தெரிவித்தார்.

“மற்ற நாடுகளை போன்று, பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்…. பெரும் வீழ்ச்சியில் பொருளாதாரம் இருக்கிறது” என பாங்க் ஆப் அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் மைக்கேல் மேயர் ஒரு குறிப்பில் தெரிவித்தார்.

“மக்கள் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள், சொத்துகள் அழிந்து போகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் தகர்ந்து 12 சதவீதமாக சுருங்கும் என்றும் கணிக்கப்படுகிறது. முழு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு விற்பனை 0.8 சதவீதம் சரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கடினமான காலத்திற்குப் பிறகு பொருளாதாரம் மீட்கப்படும் என்று வல்லுநர்கள் நம்பினாலும், இந்த சூழ்நிலை, எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது என்பதால், எதையும் நிச்சயமாக கூற முடியாது.

2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு “பெரிய சுருக்கம்” ஏற்படுவதையும், கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஆண்டின் முதல் பாதியில் மிகுந்த மந்தநிலையும் உணர்வதாக, சுவிஸ் முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான யுபிஎஸ் கூறுகிறது.

முதல் காலாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி -2.1% ஆகக் குறைந்துவிட்டதாக சுவிஸ் வங்கி டைட்டன் நம்புகிறது. மேலும் இரண்டாவது காலாண்டில் சுமார் 10% சரிவு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் தாக்கம் வேலைவாய்ப்புகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது காலாண்டின் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகும் நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்கு உயரும் என்று எதிபார்க்கப்படுவதாக பாங்க் ஆப் அமெரிக்கா கூறுகிறது.

வேலைஇழப்பு

2020ஆம் ஆண்டில் மட்டும் வைரஸ் தொற்றால் எந்த பயணங்களும் மேற்கொள்ளப்படாததால், 4.6 மில்லியன் வேலைகளை இழக்க நேரிடும் என்று பகுப்பாய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கூறுகிறது.

“அமெரிக்காவில் பயணங்களுக்காக செய்யப்படும் செலவான 355 பில்லியன் டாலர்கள் சரிவால், ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 809 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும். இது 9/11 காலகட்டத்தில் பயணத்துறை வருமானத்தில் ஏற்பட்ட தாக்கத்தை விட 6 மடங்கு அதிகமாகும்” என்று அவர்களுடைய அறிக்கை கூறுகிறது.

அவசர கால நிதியாக 2 டிரில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. அந்நாட்டின் வரலாற்றில் இவ்வாறு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இது.

ஆனால், இதனால் அதிகம் பாதிக்கப்படுவது வீடில்லாதவர்கள், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் வாங்குபவர்கள்தான் என்று தெளிவாக தெரிகிறது. ஏனெனில் இவர்களில் பலரும் காப்பீட்டிற்கின் இருப்பது குறைவு.

இந்நிலையில் கொரோனா வைரசை அதிபர் டிரம்ப் “கண்ணுக்கு தெரியாத எதிரி” என்று விவரித்துள்ளார்.

இந்தாண்டு அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு முன்னதாக நிலையை சரி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு டிரம்ப் இருக்கிறார்.
bbc.tamil